பெருந்தலைவரின் நிழலில்

பெருந்தலைவரின் நிழலில் என்ற பழ.நெடுமாறனின் நூல் 656 பக்கங்களில் பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. பெரியார் காங்கிரசை விட்டு ஏன் விலகினாரோ அதை காங்கிரசிலிருந்தே செய்வேன் எனக் காமராஜர் எண்ணிச் செயலாற்றியதையும் பெரியாரின் வைக்கம் போராட்டத்தில் காமராசரும் ஜீவாவும் கலந்துகொண்டார்கள் என்பதையும் இந்நூலின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான வழக்கை அம்மாணவர்கள் முதல்வரான காமராசரை நேரில் சந்தித்துக் கூறியதன் அடிப்படையில் வாபஸ் பெற்றது, 3000 நாட்கள் சிறையில் இருந்தது, "எனக்கே கட்சி சோறு போடுகிறது.. இந்த அழகில் விருந்து வேறா..?' என்று கேட்ட அவரது எளிய உணவுப் பழக்கவழக்கம், "120 ரூபாய்க்கு மேல் அம்மாவுக்குப் பணம் தர நான் பிசினஸ் மேனா?' என்று சொன்னது, வாடகை வீட்டில் குடியிருந்து கட்சிக்கு மாளிகை கட்டிய ஏழை என காமராசரின் புகழ் கூறும் நிறைய சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார் நெடுமாறன். அதுமட்டுமா?

இந்தி பேசாத மாநிலத்தலைவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு இந்தி ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது, காமராஜரின் குரல் கேட்டு, பார்வை தெரியாமல் படுத்திருந்த திருவிக வடித்த ஆனந்த கண்ணீர், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் சீர்திருத்தத்தில் பெரியாருடன் சேர்ந்து பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தது போன்ற சம்பவங்களையும் விளக்கி உள்ளார். 
அப்போதைய காங்கிரஸ் தலைவர்களில் மிகவும் எளிமையான பின்னணியில் வந்த ஒரே நபர் காமராசர்தான். ஆனாலும் கூட "நேருவிற்குப் பிறகு அதிகாரம் கொண்ட தலைவர்' என்று வி.கே.நரசிம்மன் சொன்னார். நேருவுக்கு காமராசர் பல யோசனைகள் கூறியிருக்கிறார். அவற்றில், முப்படைகளுக்கும் தனித்தனித் தளபதிகள் நியமிக்கவேண்டும் என்பதும் ஒன்று. இதை அறியும்போது வியப்பாக உள்ளது.
தந்தை பெரியார், தன் பிறந்த நாளில் தன்னைக் காண வந்திருந்த முதல்வர் காமராசரிடம், "நாலாஞ்சாதியைத் தூக்கிவிடுங்கய்யா' என்று வேண்டிக்கொண்டபோது அவருக்கு "நானும் தமிழன் தான், நானும் நாலாஞ்சாதி தானுங்கய்யா!' என்று பதிலிறுக்கிறார் காமராசர். அத்துடன் பெரியாருக்கு ஒரு புகைப்படத்தை பரிசாக அளிக்கிறார். அது தந்தை பெரியார் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது எடுத்தபடம். 

அதில் காங்கிரசின் முக்கியத்தலைவர்கள் பெரியாருடன் அமர்ந்திருக்கிறார்கள். பெரியாரின் காலடியில் காமராசர் ஓர் எளியதொண்டனாக அமர்ந்திருக்கிறார். படத்தைப் பார்த்த பெரியார் நெகிழ்ந்துபோகிறார்!

காமராசர் முதல்வர் பதவியை விட்டு விலகியபோது, "தாங்கள் பதவி விலகியது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்' என்று பெரியார் தந்தி அனுப்புகிறார்.
எதிரும் புதிருமாக இருந்தாலும் ராஜாஜி மீது காமராசர் பெரும் மதிப்பு வைத்திருந்ததைக் காட்டும் நிகழ்வுகளை நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கருத்துக் கொண்டவர்களை மதிக்கும் பெரும்பண்பு அவரிடம் இருந்தது. அண்ணாவின் காஞ்சிபுரம் தொகுதியில் தண்டலம் என்ற இடத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் அண்ணாவுடன் காமராசர் கலந்துகொண்டது, தன்னைத் தோற்கடித்த திமுகவைச் சேர்ந்த விருதுநகர் சீனிவாசனின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியது, நமது தலைவர் மறைந்துவிட்டார் என்று கூறி இந்திரா காந்தி காமராசருக்கு நீண்ட நேரம் வந்திருந்து, அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்து 
சென்று அஞ்சலி செலுத்தியது போன்ற செய்திகளைச் சொல்வதன் மூலமாக காமராசர் எத்தனை மகத்தான ஒரு தலைவர் என்பதை உணர்த்துகிறார். காமராசரால் மாவீரன் என்ற புகழப்பட்டவர் நெடுமாறன். அவர் எழுதியிருக்கும் இந்த நூல் தமிழக வரலாற்றை அறிய விரும்புகிறவர்களுக்கு பேருதவியாக அமையும்.

- மு.செந்தமிழ்ச்செல்வன்

பெருந்தலைவரின் நிழலில்,
பழ.நெடுமாறன், வெளியீடு: தமிழ்க்குலம் பதிப்பாலயம், 119 ஏ, டிப்போ லைன், சி.பல்லவபுரம், சென்னை 43.