தலித் பார்ப்பனன்

மராட்டி மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த மண்ணில் இருந்து தலித்துகளின் நிலையைப் பேசும் சிறுகதைகள் இவை. அம்மண்ணுக்கே உரிய முறையில் மிகுந்த ஆவேசமும் எதிர்க்குரலும் கொண்டவையாக அமைந்துள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே தங்கள் நிலையை இக்கதைகளில் உணரமுடியும். 

எப்படித்தான் கல்வி கற்று மேலே வந்தாலும் சாதியம் நயவஞ்சக முகமூடி அணிந்து, சீரழிக்கிறது என்பதை ஒவ்வொருகதையும் விளக்குகின்றன. பள்ளி ஆசிரியராக, மாணவனாக, கல்லூரி ஆசிரியனாக, அரசு ஊழியனாக, எழுத்தாளனாக தலித் கதாபாத்திரங்கள் இக்கதைகளில் இடம்பெற்று தாங்கள் எதிர்கொள்ளும் சாதிய வன்மத்தை விவரித்துச் செல்கின்றன. 

எந்த இடத்திலும் பாசாங்கற்று, வெளிப்படையாய், உரத்த குரலில் பேசும் இக்கதைகள், வாசிப்போருக்கு மராட்டிய தலித் ஒருவரின் உலகுக்கான சாளரத்தைத் திறந்துவிடுவதுடன், தான் வாழும் இடத்தையும் புதிய கோணத்தில் பார்ப்பதற்கான உந்துதலைத் தருகின்றன. 

ஒவ்வொரு கதையும் முடியும்போது, துயரம் அகமனதைக் கவ்வுகிறது. வெறும் பிரச்சார நெடி என்றெல்லாம் இல்லாமல், கலையொழுங்குடன் இக்கதைகள் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

தலித் பார்ப்பனன், சரண்குமார் லிம்பாலே
தமிழில்: மதிவண்ணன், வெளியீடு: கறுப்புப்பிரதிகள்
பி 55, பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை, சென்னை - 600 005