தெற்கிலிருந்து ஒரு சூரியன்

திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் 50 ஆண்டுகள், சட்டமன்றத்தில் கலைஞரின் 60 ஆண்டுகள், திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுகள் -ஆகிய நிகழ்வுகளால் 2017 ஆம் ஆண்டு என்பது முக்கியமான ஒன்று. இந்த வரலாற்றுபூர்வமான ஆண்டு அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த திராவிட வரலாற்றில் முக்கியமான தலைவர்களில் ஒருவரான கலைஞர் மு.கருணாநிதி தள்ளாமையால் ஒய்வு பெற்றிருக்கிறார். தி இந்து குழுமம் வெளியிட்டிருக்கும் தெற்கிலிருந்து ஒரு சூரியன்  என்கிற இந்த நூல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அட்டையில் கருணாநிதியின் படம் பெரிதாக இடம் பெற்றிருப்பதால் கவனத்தை ஈர்த்துவிட்டது. திராவிட இயக்கம் குறித்த பெருமைகளைச் சொல்லும் பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்கிற சமஸின் கட்டுரை திராவிட இயக்கத்தைக் கருணாநிதியின் செயல்பாடுகள் வழியாகப் புரிந்துகொள்ளும் முயற்சி. ஒட்டு மொத்த நூலுமே அப்படித்தான் அமைந்திருக்கிறது. இந்த பிறவி தலைவருக்கானது என்கிற அவரது உதவியாளர் சண்முகநாதனின் நேர்காணல் மிகவும் புதியது.

மு.க. ஸ்டாலினின் நேர்காணலும் கனிமொழியின் கட்டுரையும் கலைஞரைப் பற்றி நெருக்கமான சித்திரத்தை அளிக்கின்றன. எழுத்தாளர் இமையம் எழுதியிருக்கும் கட்சிக்காரன் என்ற கட்டுரை திராவிடப் பேரியக்கத்தின் உண்மையான தொண்டர்களை விளக்குகிறது. நூல் முழுக்க திராவிட இயக்கத்தின் கொள்கைகள்,  சாதனைகள் குறித்த முக்கியமான ஆளுமைகளில் நேர்காணல்கள் கட்டுரைகள் நிரம்பியிருக்கின்றன. எல்லா கோணத்திலிருந்தும் திராவிட இயக்கத்தை அணுக  முயற்சித்திருக்கிறார்கள் என்றே  சொல்லவேண்டும். திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்த முக்கியமான தரவுகள் அடங்கிய நூல்.

 

தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!

வெளியீடு: தமிழ் திசை, கே எஸ் எல் மீடியா,

கஸ்தூரி கட்டடம், எண் 859 - 860, அண்ணா சாலை, சென்னை -2