ஒளிவித்தகர்கள் தமிழில்

உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் தாங்கள் பணிபுரிந்த திரைப்படங்களுக்கு ஒளியமைப்பு செய்தபோது நிகழ்ந்த அனுபவங்களை நேர்காணல்களாக ஒரே நூலில் படிப்பது என்பது திரைப்படத்தை நேசிப்பவர்களுக்கு நெருக்கமானதாகவே இருக்கும். அப்படியொரு நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது ஒளிவித்தகர்கள் என்கிற இந்த நூல். ஜாஸ் (டீச்தீண்) படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பில் பட்லர், சுறா தாக்கும் ஒரு காட்சியில் காமிரா தண்ணீரில் மூழ்கிவிட்ட அனுபவத்தையும் ஆனால் அந்தக் காட்சி நன்றாக பதிவானதையும் அதை மீட்ட சம்பவத்தையும் சொல்கிறார். உப்புத்தண்ணீரில் நனையும் காமிராவை மீட்பதன் சிரமத்தை அந்தத் துறையில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.  இந்த நேர்காணலில் ஓரிடத்தில் அவரது குழந்தை ஒரு கோக் பாட்டிலில் இருந்து சிதறிய ஒளியை ரசித்ததையும் தன் சுயகவுரவத்தால் அந்த ஒளி அழகை தான் பார்க்கத் தவறியதையும் குறிப்பிடுகிறார்.  ஒரு குழந்தையின்  கண்ணோட்டத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் பார்க்கவேண்டும் என்கிறார் அவர். ஹாலிவுட் மற்றும் பல உலகப்பட இயக்குநர்களுடன் பணியாற்றிய எட்டு ஒளிப்பதிவாளர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் உள்ளன.  சிறப்பான மொழிபெயர்ப்பு. முடிந்த அளவுக்கு கலைச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் மொழிபெயர்ப்பாளர், வாசிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருப்பது புலனாகிறது.

 

ஒளிவித்தகர்கள் தமிழில்: ஜா.தீபா,

வெளியீடு: டிஸ்கவரி புக்பேலஸ், கேகே நகர் மேற்கு, சென்னை 78