அறிவியல் எது? ஏன்? எப்படி?

அறிவியல் துறை ஞானமுடையவர் அழகாகத் தமிழில் எழுதத்தெரிந்தவராகவும் இருந்துவிட்டால் அதைவிட பெரியவிஷயம் வேறெதுவும் இல்லை. என்.ராமதுரை அப்படிப்பட்டவர். இரு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூலில் அறிவியல்  சார்ந்த அடிப்படை விஷயங்களை, அதிசயமான கருத்துக்களைத் தெள்ளத்தெளிவாக சுவாரசியமாக கொடுத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒருங்கே தகவல்களை அள்ளித்தருகிறது இந்த நூல். உலோகங்களில் இரும்பை விட உறுதியானது குரோமியம் என்கிற தகவல் கொண்ட கட்டுரையை காலியம் என்கிற உலோகம் உள்ளங்கையில் உருகக்கூடியது என்று ஆரம்பிக்கிறார். டங்க்ஸ்டன் எளிதில் உருகவே உருகாது என்கிறார். குரோமியப் பூச்சில் வந்து முடிக்கிறார். எந்த தகவலாக இருந்தாலும் அதை அனைத்து கோணத்தில் அணுகி சுவாரசியமாகச் சொல்கிறார். அதனாலேயே இப்புத்தகம் மிக முக்கியமானது. பள்ளி ஆசிரியர்களுக்கும் கூட பாடப்புத்தகம் தாண்டி கூடுதல் விவரங்களை எளிமையாக இந்நூல் சொல்கிறது. போர்ப்படையில் இருக்கும் டால்பின்கள், இன்சாட் செயற்கைக்கோள் எப்படிச் சுற்றுகிறது?, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது எந்த நட்சத்திரத்தை? குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்படி உருவாகிறது? எனப் பல தகவல்களுக்கான நூல்கள் இவை.

 

அறிவியல் எது? ஏன்? எப்படி? அடிப்படை முதல் அதிசயங்கள் வரை 1, 2

என் ராமதுரை வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14