நெஞ்சில் உரம் நேர்மை த்திறம்

பணி வரலாறு:

தமிழக காவல்துறையின்  ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளில் ஒருவரான வி.ஆர்.லட்சுமி நாராயணன் ஐபிஎஸ் பற்றிய நூல் இது. எமெர்ஜென்சிக்குப் பிறகு காங்கிரஸ் தேர்தலில் தோற்றது. புதிதாக ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி இந்திரா காந்தியைப் பழிவாங்க விரும்பியது. அவர் மீது குற்றச்சாட்டுகளும் இருந்தன. ஒருநாள் அவர் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லியில் இருந்து ஹரியானாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் டெல்லி எல்லையைத் தாண்டுமுன் ஒரு ரயில்வே கேட்டில் வாகனங்கள் நின்றபோது அதில் இருந்து  சாலையோரம் ஒரு கல்லில் அமர்ந்துவிட்டார். நான் வரமாட்டேன். வேண்டுமானால் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்த காவல்துறை அதிகாரி சிபிஐயில் இருந்த லட்சுமி நாராயணனே. இந்திரா சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவரை மீண்டும் டெல்லிக்கே கொண்டுவந்தார் அவர். இதை சிபிஐயில் உள்ள  உயர் அதிகாரிகளே விரும்பவில்லை! இந்த கைது களேபரமாக முடிந்தது.  1980-ல் இந்திராவே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். லட்சுமி நாராயணன் சென்னைக்கு மாற்றப்பட்டு,  ஒரு டம்மி  பணியிடத்தில் அமர்த்தப்பட்டார். இதுபோன்ற பல்வேறு பணிக்கால சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றி தமிழக டிஜிபியாக ஓய்வுபெற்ற லட்சுமி நாராயணன் பல பிரதமர்கள், பல முதலமைச்சர்களிடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இந்திய வரலாற்றில் முக்கிய வழக்குகளை விசாரித்தவர். அந்த வகையில் இந்த நூல் பல வரலாற்றுச் சம்பவங்களைத் தொட்டுப் பேசுகிறது.

நெஞ்சில் உரம் நேர்மைத்திறம் வி.ஆர். லட்சுமி நாராயணன் ஐபிஎஸ், பத்திரிகையாளர் திருமலை, வெளியீடு: சோக்கோ அறக்கட்டளை,  நீதிபதி பகவதி பவன், 143, ஏரிக்கரை சாலை,  கேகே நகர்,  மதுரை -625020