அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள்

உதிரி மனிதர்கள்:

ஜீவன் பென்னியின் இரண்டாவது கவிதைத் தொகுதி  அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள். அளவில் சிறியதும் பெரியதுமான இக்கவிதைகள் நகர வாழ்வின் உதிரி மனிதர்களைப்பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. நீள அகலங்களில் சிக்காது  நகர வாழ்வின் கீழ் அடுக்குகளில்  சுற்றித் திரியும் மனிதர்கள் தன் அழுக்குத் தோலுடன் நடமாடுகிறார்கள். உண்கிறார்கள், உணவகங்களில் கோப்பை கழுவுகிறார்கள்.சீருடைக் காவலாளியாக சூரியனுக்குக் கீழே நிற்கிறார்கள்.  சமயங்களில் வெறுமனே  ‘இருக்கிறார்கள்’. குழந்தையின் பொம்மை குட்டித் தோசைக்காக மௌனமாக காத்திருக்கிறது. நாற்கர சாலையின் கானலில் பஞ்சு மிட்டாய் உருகி வழிகிறது. ஓயாமல் வரவு செலவு பார்த்துக்கொண்டிருக்கும் கடவுளுக்கு தார்ச்சாலை மரணங்கள் பற்றிய குறுஞ் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அனுப்புவதுதான் யார் என்று தெரியவில்லை.  இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் அதன்  நவீனம்தான்.  உள்ளடக்கத்தில் எளிமை கொண்ட கவிதைகள் கூட, கவனம் மிகுந்த மீள் வாசிப்பில் வேறு வேறு அர்த்தம் கொள்கின்றன. கொஞ்சம் மெனக்கெட்டால் வாசிப்பவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவம் காத்திருக்கிறது.

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள், ஜீவன் பென்னி, வெளியீடு: மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் -636 453