சதுர பிரபஞ்சம்

கவி அனுபவம்  :

மின்மினிப் பூச்சிகளற்ற இரவை

ஈடு செய்ய முடிவதில்லை

நட்சத்திரங்களால்’ என்கிறது இத்தொகுப்பின் ஒரு கவிதை.

அன்றாட வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்கள், துக்கங்கள், துக்க வீட்டில் அழும் காதலியைக் கண்டு கொள்ளும் காதல், எப்போதாவது பெய்யும் மழை மீதான கவிக்கோபம், குருட்டுப் பிச்சைக் காரியின் உடலைக் கொத்தும் கண்கள், குழந்தைகளின் குழந்தைத் தன்மை மீதான வாஞ்சை, சொற்களை செலவழித்துவிட்டவனின் குரவளையை நெரிக்கும் மௌனம்,  தன்னிலை மீறும் வாழ்வின் யதார்த்தம் என தொகுப்பு முழுவதும் கவிதை அனுபவம் நிறைந்து கிடக்கின்றன. இரவு இல்லையென்றால் நட்சத்திரங்களை யாருக்குத் தெரியும் என்கிறார் கவிஞர். புற உலகின் சின்னஞ் சிறிய அசைவுகளும், உலகுக்கு அப்பாலான உலகம் மீது மனிதன் செலுத்தும் பார்வையும் சேர்ந்து ஒலிக்கும் சொற்கள் இவரது கவிதைகள் எனலாம். வாசிப்பதற்கு எளிமையாகத் தோன்றும் கவிதைகள் அர்த்தத்தில் கணம் பொருந்தியவை என்பதே இந்தத் தொகுப்பின் சிறப்பு.

சதுர பிரபஞ்சம்: கோ.வசந்தகுமாரன், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், எண்:6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை - 600 078