கலைஞர் சமரசமில்லா சமத்துவப் போராளி

எழுத்துச் சுவடுகள்:

எழுத்தாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கருணாநிதி பற்றி எழுதி இருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இது. சட்டமன்றத்தில் ரவிக்குமார் பேசிய உரைகள் அவற்றுக்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஆற்றிய எதிர்வினைகள், அவரது கோரிக்கைகளைப் பரிசீலித்த விதம் ஆகியவற்றை இந்நூலில்  குறிப்பிட்டிருக்கிறார் ரவிக்குமார். புதிரை வண்ணான் வாரியம் அமைத்தது, ஈழ அகதிகளுக்காக வசதிகளை மேம்படுத்தியது, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பின்னால் ரவிக்குமாரின் அழுத்தமான பங்களிப்பு இருந்தது என்பதை இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்துகிறார். சமச்சீர்க் கல்வி, பள்ளிக் கல்வித்துறை மாறுதல்கள், செம்மொழி மாநாடு குறித்து அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கடந்த திமுக ஆட்சி பற்றிய வரலாற்றுப்பதிவுகள். திமுக உறுப்பினர்கள் கூட இவ்வளவு ஆர்வமாக இந்த விஷயங்கள் பற்றி எழுதியிருக்கவில்லை. ஒரு எழுத்தாளர்  சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்வானால் அவரால் என்ன செய்யமுடியும் என்பதற்கு ஆதாரமாக இந்தப் பதிவுகள் விளங்குகின்றன. காலத்தைத் தோற்கடித்த கலைஞர் என்ற பெயரில் உடல் நலம் குன்றியிருக்கும் கருணாநிதியை திருமாவளவனுடன் சென்று பார்த்துவிட்டு, எழுதியிருக்கும் கட்டுரை உருக்கமானது. ஒரு காலத்தில் கருணாநிதியை மிகக்கடுமையாக எதிர்த்தவரான ரவிக்குமார் இன்று கருணாநிதியை நேசிப்பவராக மாறியிருப்பது சுவாரசியம். அதை இதே நூலின் முகப்பில் இடம்பெற்றுள்ள கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதானால்: ‘தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்களென்று எனக்கு நன்றாகத் தெரியும்.

கலைஞர் சமரசமில்லா சமத்துவப் போராளி- ரவிக்குமார்,

 கிழக்கு பதிப்பகம்,

177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம்,

லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,

சென்னை-14