ரூமி

காதலின் கவிஞன்:

ஜலால் அல்-தீன் முஹம்மது ரூமி. மாபெரும் சூஃபி கவிஞர், இஸ்லாமிய அறிஞர். ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞன். ஆனால் இன்று நாடு, மதம், மொழி, இனம் என எல்லாவற்றையும் கடந்து உலகெங்கும் கொண்டாடப்படும் கவிஞராக இருக்கிறார் என்றால் அவரது கவிதைகளில் ஏதோ பெரும் வசியம் இருக்க வேண்டும். 1207ஆம் ஆண்டு, இன்றைய தஜிக்கிஸ்தானில் இருக்கும் வக்ஷ் என்ற சிறு கிராமத்தில் பிறந்து பல ஆயிரம் மைல்கள் நடந்து உஸ்பெக்கிஸ்தான், ஈரான், சிரியா என பல நாடுகளில் அலைந்து திரிந்து இறுதியில் தனது கடைசி ஐம்பது ஆண்டுகளை துருக்கியில் கழித்தவர். மிகவும் புதிரானவராகக் கருதப்படும் ரூமியைப் போல் காதலைக் கொண்டாடிய கவிஞர்கள் அபூர்வத்திலும் அபூர்வம். உதாரணத்திற்கு சில:

காதலர்கள்

இறுதியில் எங்கேனும்

சந்தித்துக்கொள்வதில்லை.

அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக

இருந்து வருகிறார்கள்

காலங்காலமாக.”

நீயொரு

உண்மையான மனிதனெனில்

எல்லாவற்றையும் பணயம் வை

காதலுக்காக.”

காதல் ஒன்றே நிஜம்

கவிதை அதற்கு கட்டியம்.”

ரூமியின் கவிதைகளுக்கேற்ப புத்தகமும் அழகிய கலைப்படைப்பாக மலர்ந்திருக்கிறது. “தாகங்கொண்ட மீனொன்றுஎன்ற கவித்துவமான தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பை மொழியாக்கம் செய்ய சத்தியமூர்த்தி பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ரூமியின் கவிதைகளில் உணர்வுபூர்வமாக மூழ்கித்திளைத்து, அவற்றை பல்லாயிரம் முறை அசை போட்டிருந்தால் மட்டுமே இத்தகைய மொழிபெயர்ப்பு சாத்தியம்.

காதலின் மீதும் கவிதையின் மீதும் தாகங் கொண்ட ஆன்மாவை ஒரு போதும் தணிக்க முடியாது என்பதைச்

சொல்லும் கவிதை இது:

தாகங்கொண்ட மீனொன்று

என்னுள் இருக்கிறது.

ஒருபோதும் கூடவில்லை அதற்கு

முழுத்தாகமும் தணிக்க.”

தாகங்கொண்ட மீனொன்று, மொழிபெயர்ப்பு சத்தியமூர்த்தி, வெளியீடு: லாஸ்ட் ரிசார்ட், விநியோகம்: காலச்சுவடு, 669, கேபி சாலை, நாகர்கோவில் -629001.