ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் (சிறுகதைகள்)

எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் ""இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப்பேசுகின்றன. ஒன்று குடும்பவன்முறை. அப்புறம்  சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும் நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் கடமை, உறவின் பெயர்களால், நம்பினவர்கள், நட்பாளர்கள் செய்யும் வன்முறை. இவற்றால் பாதிக்கப்பட்டு சிறுத்துப் போய் ஒடுக்கம் கண்ட பரிதாபத்துக்குரிய மனிதர்களே  தமயந்தியின் இக்கதை மனிதர்கள்.''காவல்துறையின் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெண்களின் கதைகளைச் சேகரிக்கச் செல்லும் பெண் நிருபர் ஒருவரின் பார்வையில் இருக்கும் சிறுகதை முகத்தில் அறைகிறது. அந்த பெண்களால் தங்கள் துயரங்களை  நிருபர் முன்னால் வைத்துவிட முடிகிறது. ஆனால் கணவனால் குழந்தையில்லை என்று காயப்படுத்தப்படும் பெண் நிருபர் அதை அப்படியே விழுங்கிக் கொண்டு இவர்களின் கதைகளைக் கேட்கிறார்தாஜ் ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் சித்தப்பாவுடன் சிறுவனாக கூட இருக்கும் சரவணனில் பார்வையில் விரியும் நூலிழை இறகுகள் என்ற சிறுகதை நெஞ்சைப் பிசைந்து பிசைந்து சொல்வது என்ன? வாழ்வின் சுமையையா? நொடியில் தவறிவிடும் லட்சியவாதங்களையா? துவண்டு நடைப்பிணங்களாகத் திரியும் உயிர்களையா? இவை எல்லாவற்றையுமா? புது நெம்பர் 2, கோட்டைக் காவல்நிலையம் என்ற சிறுகதையும் முக்கியமானது. எங்கும் நம்பிக்கை ஒளியே தெரியாத இருட்குகையில் பெரும்பாலான சிறுகதைகள் நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றன.

ஆசிரியர் ;  தமயந்தி, வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி 55,  பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை 600005