கவிதையின் கால்தடங்கள்

தமிழின் முக்கியமான 50 கவிஞர்களின் 400 கவிதைகளை ஒரே நூலில் காணும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன். அந்திமழை இணையதளத்தில் வாரந்தோறும் வெளியான தொடர் இப்போது அகநாழிகை பதிப்பகம் மூலமாக நூல் வடிவம் பெற்றுள்ளது.

நீண்டகால கவிதை வாசகர் ஒருவரின் நோக்கில் இந்த கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் படித்த கவிதைகளைத் தாண்டி சுதந்தரமாக எழுதப்படும் நவீன புதுக்கவிதை உலகுக்கு ஓர் இளைஞன் வருவது தற்செயலாக நிகழ்வது என்பதைவிட ஒரு வழிகாட்டியின் மூலமாகவே பலருக்கும் நிகழ்கிறது. பலர் இந்த கவிதை உலகுக்குள் வராமல் வெளியேவே நின்றுவிடவும் செய்கிறார்கள். வந்தவர்களும் சில தரைமட்டமான, எந்தவித வாசிப்பு அனுபவத்தை தராமல் வெறுமனே மடக்கி மடக்கி எழுதப்பட்ட  கவிதைகளைப் படித்துவிட்டு  கதறி ஓடிவிடுகிறார்கள். இந்நூல் எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் அறிமுகமாகவும் தொடர்ந்து பயணிக்க வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. சமயவேல் கவிதைகளுடன் தொடங்கும் இந்நூலில் கல்யாண்ஜி, ஸ்ரீநேசன், தேவதச்சன், ஆத்மாநாம், கலாப்ரியா, வா.மணிகண்டன், நகுலன் என சுமார் 50 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைவாசகர்கள் தம் இளமைக்காலத்தில் படித்து மறந்துபோன கவிதைகளையும் இத்தொகுப்பில் கண்டுகொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

வெளியீடு:  அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம்603306