நீரோட்டம் அரசியல் பண்பாடும் பண்பாட்டு அரசியலும்

சென்னை லயோலா கல்லூரியில் இயங்கிவந்த மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பின் சார்பில் தேர்தல்களை ஒட்டிக் கருத்துக்கணிப்புகள் எடுப்பது வழக்கம்.  2001 சட்டமன்றத் தேர்தல் முதல் 2011 நாடாளுமன்றத் தேர்தல் வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களை யொட்டி மக்கள் ஆய்வகம் நிகழ்த்திய கருத்துக்கணிப்புகளின் தொகுப்பாக நீரோட்டம் என்ற தலைப்பில் இந்நூல் வெளியாகி உள்ளது. பேராசிரியர் .ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ் மக்களின் எண்ண ஒட்டத்தைப் பிரதிபலிக்கின்றன.

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்த கூட்டணி முந்துகிறதுஎந்தப்பிரச்னை முக்கியமாக நிற்கிறது என்று ஏறக்குறைய சரியாகவே கணித்திருப்பதை உணரமுடிகிறது. யாருக்கு எத்தனை சீட் என்கிற கேள்வியைப் பின்னுக்குத்தள்ளி யாருக்கு எத்தனை சதவீத ஆதரவு என்ற கணிப்பைமட்டுமே இந்த ஆய்வுகள் முன்வைத்துள்ளன. தேர்தல் முடிந்ததும் வேலையைப் பார்க்கப் போய்விடாமல் மீண்டும் ஒரு களஆய்வு நடத்தி அதை வெளியிடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்திருப்பது  முக்கிய அம்சம். பல பிரபலமான அம்சங்கள் குறித்தும் இந்த ஆய்வுகளில் முடிவுகள் வெளியாகி உள்ளன. உதாரணத்துக்கு 2004 ஏப்ரலில் நடத்தப்பட்ட கள ஆய்வில் ரஜினியின் பாபா படத்தின் தோல்விக்குக் காரணம் என்ன என்ற ஒரு கேள்வி. 36.4 %பேர் அப்படத்தின் கதை பொதுமக்களை ஈர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்ஜெயலலிதாவின் பண்புகளில் மேலோங்கி இருப்பதாக 2004 நவம்பரில் செய்யப்பட்ட ஒரு களஆய்வு சொல்வது அவரது துணிச்சல்(41.3%பேர் ). ரஜினி அரசியல் பேசுவாரா? தமிழ்நாட்டு நடிகர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் யார்? போன்ற கேள்விகளும் பதில்களுமாக இதுவொரு மக்கள் எண்ணப்பதிவு

தேர்தல் வந்தாலே லயோலா கருத்துக் கணிப்பு பரவலாக எதிர்பார்க்கப்படும். ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மக்கள் ஆய்வகத்தின் கருத்துக் கணிப்பு எதுவும் வெளிவரப்போவதில்லை என்பது ஏமாற்றமே.

தொகுப்பு; ச.ராஜநாயகம்.வெளியீடு: மக்கள் ஆய்வகம்,லயோலா கல்லூரி, சென்னை - 34