காவியத் தலைவரும், காவியக் கவிஞரும் - வாலி எழுதிய எம்.ஜி.ஆர் படப்பாடல்கள்

தமிழ்த் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து தன் மறைவுக்குப் பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரது திரைப்புகழ் அரசியல் வெற்றியாக மாற்றம் அடைந்ததற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று அவரது படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பாத்திரங்களை அல்லாமல் எம்ஜிஆர் எனப்படும் மாமனிதரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்கள் அவை. எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற பாடல் அவரது கனவுகளை திரையில் விதைத்து பின்னர் நனவாக்கிய பாடல். எங்கள் தங்கம் படத்தில் வருகிற "நான் செத்துப் பொழைச்சவண்டா' அவரது மனஉறுதியைச் சொல்லி அவரை அதிமனிதனாக உருவாக்கிய பாடல். 1966ல் வெளிவந்த நான் ஆணையிட்டால் படத்தில் "தாய் மேல் ஆணை, தமிழ்மேல் ஆணை' என்ற பாட்டும் அவரது பிம்ப உருவாக்கத்தில் மிகமுக்கியமானதாக இடம்பெறுகிறது. படகோட்டி படத்தில் இடம்பெற்ற "தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்கவிட்டான்' என்ற பாடலைச் சொல்லாமல் இன்று யாருமே மீனவர் பிரச்னைகளைப் பேசிவிட முடியாது. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்( ரிக்ஷாக்காரன் 1971), நான் ஏன் பிறந்தேன்( நான் ஏன் பிறந்தேன் 1972), தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று( நேற்று இன்று நாளை 1974) ஆகிய பாடல்களும் முக்கியமானவை. இந்த பாடல்களை அவை வெளியான ஆண்டுகளில் இருந்த அரசியல் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அவற்றின் காலப்பொருத்தம் விளங்குகிறது. அதே போல் எம்ஜிஆருக்கென்று வாலி எழுதிய காதல்பாடல்கள் வேறொரு தனிச்சுவை மிகுந்தவை. அவை அந்த காலத்து ரசிகர்களால் கேட்டு, பார்த்து ரசிக்கப்பட்டவை.கவிஞர் வாலி நல்லவன் வாழ்வான் என்ற படத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமாகி படகோட்டி படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்அவர் எம்ஜிஆரின் 52 படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவை அனைத்தையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறது வாலி பதிப்பகம். பிரபல இசைத் தட்டு சேகரிப்பாளரான திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் இப்பாடல்களைத் தொகுத்திருக்கிறார். அரிதில் கேட்கக் கிடைத்திராத பாடல்களைக் கூட விடாமல் சேகரித்து வைத்திருப்பவர் அவர். எனவே இந்த நூலை வாலியின் பாடல்களுக்கான அதிகாரபூர்வ நூல் என்றே சொல்லலாம்.

வெளியீடு: வாலி பதிப்பகம், 12/28, சௌந்தரராஜன் தெரு,தியாகராயர் நகர்,சென்னை-600017