ஓநாய் குலச்சின்னம்

வரலாற்றில் படித்த செங்கிஸ்கான் மீது இன்னும் பலருக்கு அச்சம் நீங்கியிருக்காது. அவரும் அவரது மங்கோலியப் படையினரும் எப்படி உலகில் பல நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைத்தனர் என்பதற்கான விடைகளைத் தரும் வரலாற்றுப் புனைவு நாவல் ஓநாய்குலச் சின்னம். சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் என்பவர் எழுதிய புகழ்பெற்ற இந்நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் சி.மோகன். கலாச்சார புரட்சி காலத்தில் உள்மங்கோலியாவில் வாழ்ந்த நாடோடி மக்களுடன் வாழ்வதற்காக பீஜிங்கிலிருந்து அனுப்பப்படும் ஹான் சீன மாணவன் ஒருவனது பார்வையில் முழு நாவலும் சொல்லப்படுகிறது. ஓநாய்களின் வாழ்க்கை முறை அவற்றுடன் மங்கோலிய மேய்ச்சல் நில மக்கள் கொண்டிருந்த உறவு, சீன ஆதிக்கத்தில் எப்படி இந்த உறவு சிதைந்து ஓநாய்கள் முழுக்க கொல்லப்பட்டு மேய்ச்சல் நிலம் பாலைவனமாகப் போய் அந்த மேய்ச்சல் நாகரிகம் அழிக்கப்பட்டது என்பதை இந்நாவல் விளக்குகிறது. ஓநாய்க் கூட்டங்களின் தாக்குதல் முறை, மேய்ச்சல் நிலத்தில் மான்களையும் வேறுபல தாவர உண்ணிகளையும் கொல்வதன் மூலம் அவை எப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மேய்ச்சல் நிலத்தைப் பேணுகின்றன போன்ற தகவல்கள் அழகாக சித்தரிக்கப்படுகின்றன. பில்ஜி என்கிற மூத்த மேய்ச்சல் நிலக்குழு தலைவர் ஒருவருடன் நெருங்கிப் பழகும் இம்மாணவன் அவரிடமிருந்து ஓநாய்களைப் பற்றிக் கற்றுக்கொள்கிறான். மர்மோட்டுகள், எலிகள், மான்கள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் என நாவல் முழுக்க மேய்ச்சல் நிலத்தவர்களின் அசைவை உணவுப் பழக்கங்கள் வாசிக்கையில்  எச்சில் ஊறச்செய்கின்றன. எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பாக செல்லும் நாவல். சி.மோகனின் தேர்ந்த மொழிபெயர்ப்பில் வாசிப்பு இலகுவாக உள்ளது.

ஆசிரியர் : ஜியாங் ரோங், தமிழில் சி.மோகன், வெளியீடு: அதிர்வு பதிப்பகம், எண் 38, இரண்டாவது தெரு, ராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை - 93.