இறுதி யாத்திரை

இறந்துபோன தந்தையின்  உடல் வீட்டிலிருக்கிறது. அங்கிருந்து மகன்களின் பார்வையில் கதை விரிகிறது. தந்தைøப் பற்றிய நினைவுகளைத்தான் மகன்கள் அசைபோடுகிறார்கள். சிலோனில் வேலைக்குப்போயிருந்த தந்தை குடும்பத்துக்கு எதுவும் அனுப்புவதில்லை. அம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஒரு மகன் நான் போய் பார்த்துவிட்டு அங்கே வேலை தேடிக்கொள்கிறேன் என்று சிலோனுக்குச் செல் கிறான்.  தந்தையின் அலுவலகத்தில் தங்குகிறான். அங்கே அவருக்கு இன்னொரு மனைவி இருக்கிறார் என்று தெரிகிறது. சில நாட்கள் இருந்துவிட்டு ஏதுவும் பேசாது ஊருக்குத் திரும்பி விடுகிறான். இங்கே காத்திருக்கும் அம்மாவிடம் ஒரு பேச்சும் சொல்வதில்லை. அப்பாவின் உடல் சிதையில் ஏற்றப்பட்ட பின் அவரது பெட்டியை உடைத்து சிலோன் தொடர்பு பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். எதுவும் கிடைப்பதில்லை. தந்தையை ஹிப்போகிரட் என்று கோபத்துடன் சொல்கிறான் ஒரு மகன்.  “எனக்காக அப்பா ஒருபோதும் துக்கப்பட்டிருக்கமாட்டார். துக்கப்பட்ட அப்பாவை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று நினைத்துக்கொள்கிறான். நாவலின் இறுதியில் கிளம்பிச்செல்லும் இன்னொரு மகன். யாருமே அறியாமல்  தந்தையின் நினைவில் அவனுக்குள்ளொரு கேவல்.  மரணம் பற்றியும் உறவுகள் பற்றியும் இவற்றுக்கு இடையிலான மௌனம், வலி ஆகியவற்றை எதார்த்தமாகச் சொல்லிப்போகிறது இந்த இறுதியாத்திரை.காலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கண் முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம்டிவி இந்த நாவலில் அப்படியே பதிவு செய்வதாக பின் அட்டைக் குறிப்பு சொல்கிறது. உண்மைதான்! ஷைலஜாவின்  மொழிபெயர்ப்பில் இந்நாவலின் பின்னே புகை மூட்டமாகப் படிந்திருக்கும் வாழ்க்கையின் கேள்விகளும் புதிர்களும் துலக்கம் பெறுவது சிறப்பு.

ஆசிரியர் : எம் டி வாசுதேவன் நாயர்: தமிழில்: கேவி ஷைலஜா, வெளியீடு: வம்சி பதிப்பகம்,  19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை, 606601