முடிவின் ஆரம்பம்

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏன் என்கிற அடிப்படை கேள்வியோடும் அழகான, தெளிவான ஒளிப்பதிவுக் காட்சிகளுடனும் ஆரம்பிக்கிறது முடிவின் ஆரம்பம் என்கிற இந்த ஆவணப்படம். கோவையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் சிவா இயக்கியுள்ள இப்படம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் குறைபாடுகளை கேள்விக்குள்ளாக்குவதுடன் அணு மின்சாரமே வேண்டாம் என்கிற இறுதிக் கருத்தை ஆணித்தரமான காட்சிகளுடன் முன்வைக்கிறது. தமிழ்நாடு மின்பொறியாளர் அமைப்பின் தலைவர் சா.காந்தி, மாநிலத்தில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களை சரிசெய்தாலே கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்பதை இப்படத்தில் விளக்குகிறார். கூடங்குளம் மின் நிலையம் தன் சொந்த உபயோகத்துக்கு 200 மெகாவாட் பயன்படுத்திக்கொண்டு மீதி 600 மெகாவாட்தான் வெளியே தரும். அதிலும் 46 சதவிகிதம்தான்  தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் என்ற தகவலை இந்த ஆவணப்படம் சொல்கிறபோது இதற்கா இவ்வளவு கோடிகள், செலவு என்று தோன்றுகிறது. கல்பாக்கம் அணு உலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், அங்கு பணி புரிந்து புற்றுநோயால் இறந்த ஒருவரின் மகளின் பேட்டி என்றெல்லாம் விரிந்துசெல்லும் இந்த ஆவணப்படத்தில் பேசும் சுப. உதயகுமாரன் கூடங்குளம் அணுமின்நிலைய திட்ட இயக்குநராக இருந்த எஸ்.கே.அகர்வால் புற்றுநோயால் இறந்து அந்த தகவல் மறைக்கப்பட்டு உடலுறுப்புகள் செயலிழந்து இறந்ததாக செய்தி வெளிவந்ததைச் சொல்கிறார். கூடங்குள அணுமின் நிலைய சிலிண்டரில் குறைபாடு என விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் கூறுகையில் பல்வேறு விதிமுறைகள், அமைவிடத்தகுதிகளை மீறி இது அமைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார் மருத்துவர் புகழேந்தி.  உலகெங்கும் நடந்த அணு உலை விபத்துக்கள் பற்றிய காட்சிகளும் இதில் தொகுக்கப்பட்டிருப்பது இயக்குநர் மற்றும் அவரது குழுவினரின் கடும் உழைப்பைக் காண்பிக்கிறது. அணு சக்திக்கு எதிரான வலுவான படம் இது.

வெளியீடு: உலக மனிதாபிமான கழகம்