விதானத்துச் சித்திரம்

கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் 44 கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் கற்பனையும் அழகான சொல்முறையும் கொண்ட கவிதைகள். அதனாலேயே நம் கவனம் ஈர்க்கின்றன.கோயிலும் கோயில் சார்ந்த வாழ்வும், அந்த வாழ்வு சார்ந்த கடந்தகால நினைவுகளும்தான் பாடுபொருள்கள். தொகுப்பில் ஆங்காங்கே சில அரசியல் பகடிக் கவிதைகளும் உண்டு(கேயாஸ் தியரி, மாண்புமிகு).

பிரெய்லி விரல்களின் ஆரோகணத்தில் மறையும் மழைநாள் சூரியன், தேவாலயத்தில் மிதந்து வரும் பறவையின் இறகு, நினைவின் கமகங்களில் இழையோடும் வயலின், பறவையினம் மறைந்து போன நீலவானம், எள் விளக்குகளின் நடுவே சுடரும் பிரார்த்தனைக்குரல்கள், என ரவி சுப்பிரமணியன் எழுதிப்போகும்  சித்திரங்கள் நகர வாழ்வின் சுரணையுணர்வற்ற திடகாத்திரத்தின் மீது கவிதைக் கல்லெறிகின்றன. கற்பனையின் மிளிறலும், அழகியல் தோய்ந்த  சொல்முறையிலும் பலங்கொள்ளும் தொகுப்பு இது. அளவில் சிறிய கவிதைகள் பெருமளவில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அளவில் நீளமான கவிதைகள்  உணர்வுப்பகிரலாய் உள்ளம் தொடுகின்றன.

ஆசிரியர் :  ரவி சுப்பிரமணியன், வெளியீடு : போதி வனம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014