சிவன் சொத்து

தஞ்சைமாவட்டத்தில் சிவபுரம் என்ற ஊரில் 1951-ல் கிடைத்த ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டன, ஆனால் இவை கடத்தப்பட்டன என்ற செய்தி தெரிய வந்தபோது பத்து ஆண்டுகள் ஓடி இருந்தன. உண்மையான சிலைகளுக்குப் பதிலாக போலிகளை வைத்துவிட்டு, அவற்றை லவட்டி விட்டார்கள்!. அமெரிக்கா சென்ற சிவன் சிலையை எப்படி மீட்டு வந்தார்கள் என்ற சம்பவத்தில் தொடங்கி சிலை கடத்தல் எப்படி நடக்கிறது என்கிற தகவல்களை எல்லாம் திரட்டி கோவி. லெனின் எழுதி இருக்கும் நூல் சிவன் சொத்து. லெனின் தனக்கே உரிய பகுத்தறிவுப் பாணியில் இந்த கடத்தல் விவகாரத்தை ஆராய்வதால் விருப்பு வெறுப்பின்றி எல்லோரையும் வாங்கு வாங்கென்று வாங்குகிறார். லண்டனில் இருந்த பத்தூர் நடராஜர் சிற்பத்தை இந்தியா கொண்டுவர தடயவியல் அறிஞர் சந்திரசேகரன் அறிவியல் முறைப்படி நிரூபித்ததை விளக்கும் லெனின், ‘கடவுளை’ அறிவியல் கண்டறிந்த தருணம் அது என்கிறார் சுவாரசியமாக. இதுபோல் பல்வேறு சிவன்கோயில் சிலை திருட்டுகளை விளக்குகிறது இந்த நூல். எதற்கய்யா நடராஜர் சிலைக்கு அமெரிக்கக்காரர்கள் அலைகிறார்கள்? அதன் கலைமதிப்பு ஒரு புறம் இருந்தாலும் லெனின் கேட்கிறார்: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கு அர்த்தம் இதுவோ?

ஆசிரியர் : கோவி லெனின், வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14