
காஞ்சி மடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பாதுகைகளைக் கேட்டுப்பெற்று அல்லது அவராலேயே வழங்கப்பட்டு தங்கள் இல்லத்தில் வைத்து பூஜை செய்துகொண்டிருக்கும் ஏராளமான பக்தர்களின் அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல். குரு பாதுகா பிரவாஹம் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுமம் உருவாக்கப்பட்டு அவரது பாதுகைகளைப் பூஜிப்பவர்களை ஒன்று திரட்டி, அவர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டிருக்கின்றன. கோடியக்கரை காட்டிலிருந்து ஒரு குதிரையைப் பிடித்து, அதற்கு நாட்டியம் கற்பித்து தனக்குத் தரும்படி ஒருவரிடம் கேட்டுக்கொள்கிறார் பெரியவர். அதேபோல் அவரும் ஆள் வைத்து குதிரையைப் பிடித்து, அதற்கு ஒரு இஸ்லாமியரை வைத்து நடனம் கற்பித்து பெரியவரிடம் சேர்க்கின்றார்கள். அப்படியே அவரிடம் பாதுகையைத் தருமாறு வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். இப்போது உலகமெங்கும் பரவியிருக்கும் பெரியவரின் பக்தர்கள் பல நாடுகளில் அவரது பாதுகைக்கு பூஜைகள் செய்துவருகிறார்கள் என்கிறது இந்த நூல்.
ஆசிரியர் : டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், வெளியீடு: செங்கைப் பதிப்பகம், ப்ளாட் 17, 10வது தெரு, சக்தி நகர், ஆலப்பாக்கம், செங்கல்பட்டு- 603003