அவதானக் கலைஞர் ஆறுமுகம்

சதாவதானக் கலைஞராக புகழ் பெற்றிருந்தவர் செய்குத்தம்பிப் பாவலர். அவரிடம் தமிழும் அவதானக் கலையும் கற்ற மாணவரான அவதானக் கலைஞர் ஆறுமுகம் பிள்ளை, தசாவதானியாக விளங்கினார். அதாவது ஒரே சமயத்தில் பத்து வேறுபட்ட செயல்களைச் செய்துகாண்பித்தல். பல்வேறு இடங்களில் தன் திறமையை சான்றோர்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டிய பெருமகன் ஆறுமுகம். அவரது நூற்றாண்டு விழா 1992-ல் கொண்டாடப்பட்டது. அந்த விழா நினைவு மலரை மீண்டும் நூல் வடிவில் ஆர்வத்துடன் கொண்டு வந்திருக்கிறார் அவரது பேரன் முனைவர் மு. ஆறுமுகம்.

தாத்தாவுக்கு பேரன் ஆற்றும் தொண்டு என இதைக் கொள்ளலாம். திருவாவடுதுறை ஆதினத்தின் முழுநேர சமயப்பயிற்றுனராக இருந்த இவர் தமிழையும் சைவத்தையும் பரப்புவதையே பணியாகக் கொண்டவர். திருவிக, கிவாஜ, கிருபானந்த வாரியார் போன்ற பெருமக்கள் முன்னிலையில் அரை நூற்றாண்டுக்கு முன்னதாக ஆறுமுகம் பிள்ளை செய்துகாட்டிய தசாவதான நிகழ்ச்சிகள், அவர் இயற்றிய வெண்பாக்கள் போன்றவை பற்றிய சுவாரசியமான செய்திகள் அடங்கிய நூல் இது. இவர் செய்த தசாவதானங்கள்: 1) இறைநாமம் நவில்தல் 2) இலாடச்சங்கிலி கழற்றல் 3) இலக்கியம் 4) இலக்கணம் 5) கவிபாடல் 6) கிழமை கூறல் 7) சோதிடம் 8) கண்டத்தொகை 9) கண்டப்பத்திரிகை 10) கல்லெறி எண்ணல்.

ஆசிரியர் : முனைவர் மு.ஆறுமுகம், வெளியீடு: அமுத நிலையம், 17, ஸ்ரீபுரம் இரண்டாவது தெரு, இராயப்பேட்டை, சென்னை -14