விசும்பின் துளி

நாஞ்சில் நாடனில் பதிமூன்றாவது கட்டுரைத் தொகுதி ‘விசும்பின் துளி’. மொத்தம் நாற்பது கட்டுரைகள். பயண அனுபவங்கள், வாசிப்புகள், சந்தித்த மனிதர்கள், சமகால இலக்கியம், திரைப்படங்கள் என விரிகிறது கட்டுரைத் தொகுப்பு. முன்னுரையில் பதிமூன்று என்கிற எண்ணிற்கும் தமிழுக்குமான தொடர்பில் இருந்தே தொடங்குகிறது சுவாரஸ்யம். ஒரு சொல்லின் அர்த்தம் கூட அதன் ஆழம் கண்டடைந்து கட்டுரையாய் விரிந்திருக்கிறது. நான்கு என்ற எண்ணுக்கும் தமிழில் அது எவ்வாறு எங்கெல்லாம் பயன்படுகிறது என்பது பற்றிய விளக்கமும் தருகிற ‘சதுரம்’ கட்டுரையை இதற்கு உதாரணமாய் சொல்லலாம். பக்தி மற்றும் சங்க இலக்கியத்தில் நாஞ்சில் நாடன் கொண்டிருக்கும் மேதமை எழுத்தாக மாறுவது தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருங்கொடை.

மற்றுமொரு கட்டுரையில் சமகால இலக்கிய உலகம் பற்றிச் சொல்கிறார். அதாவது இலக்கியவாதிகள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் உணர்வுகள் குறித்து. எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளைப் பற்றி பேசும் போது கொண்டிருக்கும் அதே ஆர்வம் மற்றும் அக்கறையை இளம் எழுத்தாளர்களான ஏக்நாத், வினோலியா, சித்ரா ரமேஷ், பிராஜனந்த் போன்ற இளம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் தந்திருப்பது குறிப்பிடப்படவேண்டியது. இலக்கியப் புனைவுகள் திரைப்படமாகும்போது எழுகிற சிக்கல்கள் பற்றி சொல்வதோடு சமகால புனைவுகளில் திரைக்கதை வடிவத்தை எட்டக்கூடிய சிலவற்றையும் பற்றி கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

மொத்தக் கட்டுரைகளையும் ஒரு மூச்சில் வாசித்து முடிக்க முடிவதில்லை. புள்ளிகளை விரிவுபடுத்தி கோலம் வளர்வது போல் ஒவ்வொரு கட்டுரையுமே நமது வாசிப்பனுபவத்தை விரிவாக்குகிறது. இவற்றோடு நாஞ்சில் நாடனுக்கே உரிய அங்கதச் சுவையும் புத்தகமெங்கும் விரவியிருக்கிறது. எத்தனைத் தகவல்கள், வாழ்வனுபவங்கள் எனத் திகைக்கச் செய்கிறது. படித்து முடிக்கையில் தோன்றுகிறது இந்தக் கட்டுரைத் தொகுதிக்கு ‘விசும்பின் துளி’ என்பது தன்னடக்கமான தலைப்பே தான் என்று.

  • ஜா.தீபா
ஆசிரியர் : நாஞ்சில் நாடன், வெளியீடு : விஜயா பதிப்பகம்,  20 ,ராஜ வீதி,  கோயம்புத்தூர் 641001