வாரணாசி

என் கவிதைகளில் அதிகம்

வார்த்தைகள் தடுமாறிச் சிந்தி விட்டன

அதை அள்ள முயலாதீர்கள்

தாறுமாறாக உடைந்துவிடலாம்

ஒருவேளை உங்கள் கைகளில்

ஒரு பிசினைப் போல ஒட்டிக்கொள்ளக் கூடும்

- என்று தன்னுடைய புதிய கவிதைத் தொகுப்பான வாரணாசியில் எச்சரிக்கும் தேவேந்திரபூபதியின் கவிதை உலகம் காலம், வெளி, வரலாறு, பண்பாடு, சூழல் ஆகியவற்றால் ஆன பிம்பங்கள் நிரம்பியது. சங்கக் கவிதைகளின் பின்புலமும் மரபின் வேர்களும், தத்துவங்களின் சாரங்களும் ஊறிய சொற்களாய் அவரது கவிதைகள் வடிகின்றன. வாரணாசி என்கிற பழமையான நகரால் அலைக்கழிக்கப்படாமல் ஒரு கவி உள்ளம் இருக்கமுடியாது. அந்நகர் பற்றி இடம்பெற்றுள்ள இரண்டு கவிதைகளிலும் அரிச்சந்திரனின் அவலமும் சந்திரமதியின் துயரமும் மண்டையோட்டை ஏந்தியிருக்கும் சிவனின் காலாதீதமும் இடம்பெறுகின்றன. இந்த பிம்பங்களைக் கொண்ட நிலத்தை கங்கை கழுவிக்கொண்டே இருக்கிறது. //அங்கே நிலம் கழுவித் துடைத்து நதிபாடுகிறது. நதி கழுவிக்கழுவி நிலம் வாழ்கிறது//

தேவேந்திர பூபதிக்கே உரிய  இறுக்கமான  சொற்கட்டும் படிமங்களும் கொண்ட கவிதைகளுக்கு நடுவே, சுகமாக அகம் மலரச்செய்யும் கவிதை வரிகளும் இருக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கும் நான்கு கவிதைகளில் நாய்கள் இடம் பெறுகின்றன. நாய்களின் வழியாக இக்கவிதைகளில் துலங்குவது ஒரு வாழ்க்கை; ஓர் உணர்வு; ஒரு பிரதிபலிப்பு; ஒரு சொட்டுத் துயரம்; ஒரு புன்னகை.

கவிதை நூலின் பின்னட்டையில் ஆனந்த் சொல்லியிருப்பது போல் கவிதையின் உள்ளொழுங்கைக் குலைத்துப்போட்டு ஆடும் விளையாட்டை பூபதி ஆடுகிறார் என்பதை இக்கவிதை நூல் முழுக்க காணமுடியும்.

ஆசிரியர் : பா.தேவேந்திர பூபதி, வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்,  669,கேபி சாலை, நாகர்கோவில் -  629001