விடம்பனம்

கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டு கால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது.  நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்தத் தொடர்பற்ற தன்மையைத் தாண்டி,மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல். மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை மரங்களும் மிகப்பெரிய நிலப் பண்ணையும் பக்கங்கள் தோறும் நிறைந்து ஞாபகங்களின் மூச்சு முட்டுகிறது. ‘ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதி. எங்களைப் போன்ற முதல் தலைமுறை படிப்பாளிகளுக்கு அவரைப் பிடிக்கும் என்று நாய்க்கு ‘ஜிம்மி’ என்று பெயர் வைத்த காரணம் சொல்லும் மணிமொழி, மர்பி ரேடியோ லைசென்ஸ் வாங்கும் தமிழ்வாணன் - இருவரும் தான் கீழத்தஞ்சையில் கிளர்ந்த லட்சியவாத தலைமுறையின்  அம்சங்கள். பண்ணையில் வேலைக்காக வரும் ட்ராக்டர், அதை எதிர்க்கும் கூலி வேலை செய்யும் மக்கள், அதில் ஓடும் சாதிக்கோடு, நிலவுடமையாளருக்கு எதிரான வன்முறை என்று வலிமையான அரசியல் பேசும் இந்நாவல் இதில் வரும்  பெண் பாத்திரங்கள் மூலமாக கட்டற்ற சுதந்திரம் பேசுகிறது. வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதத்தில் உலவும் ‘மைனர்கள்’ மற்றும், ஆடுதன் ராணியைக் கொண்டு காமமும் காதலும் விரிகின்றன.  தொடர்பில்லாத சம்பவங்கள் போல வளர்ந்து செல்லும் விடம்பனத்தில் எல்லாவற்றையும் இணைக்கும் மிகப்பெரிய நதியொன்று சலசலத்து ஓடுவதைக் காணமுடியும். “இந்த நாவலில் சொற்களால் உருவாக்கப்படும் காட்சிகளைக் காட்டிலும் காட்சிகளாக நிறுவப்படும் சொற்களே அதிகம் என்பதை வாசிக்கும் போது உணர முடியும்” என்று சுகுமாரன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. கீழத்தஞ்சையை ஓர் ஐம்பதாண்டுக்கு முன்னால் போய் பார்த்துவிட்டு வர உதவுகிறது இந்நாவல் என்று சொல்லலாம்.

ஆசிரியர் : சீனிவாசன் நடராஜன், வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001