நெருப்புப் பொறிகள்

தமிழ்நாட்டில் வாழும் முக்கியமான பொருளாதாரம், மாநில சுயாட்சியியல் அறிஞரான பேராசிரியர் நாகநாதனின் கருத்துக்கள் எப்போதுமே கவனிக்கதக்கன. திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கூட அவரது கருத்துகளில் துணிச்சலும் தனித்துவமும் இருக்கும். அவர் சிந்தனையாளன் இதழில் குட்டுவன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் பத்தியிலும் இந்த தனித்துவம் இருந்தது. இந்திய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், மதம், நீதித்துறை, சாதியம், மத்தியில் ஆளும் கட்சிகள் இவை பற்றியெல்லாம் குறிப்பிட்ட நிகழ்வுகள் சார்ந்து மிக ஆழமான கருத்துகளை அவர் எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைத் தொடர் நூல்வடிவம் பெற்று நெருப்புப் பொறிகள் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. எது ஜனநாயகம்? என்ற தலைப்பிலான முதல் கட்டுரையை எடுத்துக்கொள்வோம். இந்திய, சீன, அமெரிக்க,  மக்கள் தொகை இவ்வளவு என்று ஆரம்பிக்கும் நாகநாதன், அமெரிக்க அரசியலை ஆணிவேரில் இருந்து ஆரம்பித்து அலசி, சீனத்து அரசியலை புட்டுபுட்டு வைத்து இந்திய அரசியலுக்குள் திரும்பி குட்டு வைக்கிறார். அனாவசியமாக புள்ளி விபரங்களை போட்டு நிரப்பாமல், எது அவசியமோ அவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளாக இவை உள்ளன. பல நூல்களைப் படித்த தெளிவு இந்த ஒரு கட்டுரை நூலிலேயே கிடைக்கும் என்பது தெளிவு.

ஆசிரியர் : பேராசிரியர் மு.நாகநாதன்,வெளியீடு : கதிரொளி பதிப்பகம்,/ எண்;14, சிவசங்கரன் மாடி குடியிருப்பு,சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 86, பேச : 044 – 24321067