ஆஷ் அடிச்சுவட்டில்

ஆ.இரா.வேங்கடாசலபதியின்  கடினமான உழைப்பில் சில ஆளுமைகள் பற்றி சேகரிக்கப்பட்ட அரிய தகவல்கள் நிறைந்த கட்டுரைத் தொகுப்பு ஆஷ் அடிச் சுவட்டில் என்ற பெயரில் கிடைக்கிறது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் டி.வி.சாம்பசிவம் பிள்ளை என்ற காவல்துறை அதிகாரி தொகுத்த மருத்துவ அகராதி பற்றிய கட்டுரை உண்மையிலேயே மிகவும் நெகிழ வைக்கிறது. ஐந்து பெருந்தொகுதிகள் கொண்ட இந்த அகராதியை சாம்பசிவம் பிள்ளை தனி ஆளாக எப்படி தொகுத்து எழுதினார் என்பதே தலை சுற்றும் சாதனை. ஆனால் அவரால் இந்த அரிய களஞ்சியத்தைப் பாதியே வெளியிட முடிந்திருக்கிறது. அவர் இறந்தபின் மீதி கையெழுத்துப்படிகள் தாசில்தார் அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட, அவற்றை வ.சுப்பையா பிள்ளை(மறைமலையடிகள் நூல் நிலையத்தைத் தோற்றுவித்தவர்) தேடிக் கண்டடைந்திருக்கிறார். இந்த அகராதி பின்னர் மறுபதிப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட குழப்படிகளையும் இக்கட்டுரை விளக்குகிறது. இப்படி ஒவ்வொரு ஆளுமைகள் பற்றியும் முழுமையான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. ஆஷ் அடிச்சுவட்டில் என்ற கட்டுரை மிகமிகச் சுவாரசியமானது. ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார் என்பதோடு நம் வரலாற்று அறிவு முடிந்துவிடுகிறது. ஆஷ் எப்படி இருப்பார் என்று நமக்குத் தெரியாது. நூலாசிரியரோ முன்னோக்கிச் சென்று ஆஷின் பேரனை டப்ளின் நகருக்கு அருகே சந்திக்கிறார். தாத்தாவைக் கொன்ற  வாஞ்சிநாதனின் படத்தைப்பார்க்கும் பேரன் சொல்கிறார்: எவ்வளவு பொலிவான இளம் முகம்! எல்லீசன், உவேசா, ம.வீ. இராமானுஜாசாரியார், எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு. வ.உ.சி., ஏகே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ். சுப்பிரமணியம், எரிக் ஹாப்ஸ்பாம், தே.வீரராகவன் ஆகிய மேலும் பல ஆளுமைகளைப் பற்றி உண்மையான, மிகைப்படுத்தல் இல்லாத தகவல்களைப் படிக்கவேண்டுமானால் இந்த நூலைத்தான் படிக்கவேண்டும்.

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி, வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001