வனரஞ்சனி

சங்க இலக்கிய மரபில் வேர் ஊன்றி நவீனத்துவத்தின் பரப்பில் அசைகின்றன இவரது கவிதைகள். வனரஞ்சனி அவரது புதிய கவிதைத் தொகுப்பு.

பனை நார்க்கட்டிலில்  படுத்திருக்கும்

வேப்ப மர நிழலுக்கு

சொற்கள் இல்லை

ஆனாலும் சொல்லிக்கொண்டிருக்கிறது

 ஒரு காதல் கதை.

இந்த கவிதையில் வருகிற பனைநார் கட்டிலும் வேப்பமர நிழலும் காதல் கதையும்  நேரடியாகச் சொல்வதையும் தாண்டி நுட்பமாகப் பார்த்தால் இழப்பின் நினைவூட்டல் சித்திரங்களாகவும் நிலைக்கின்றன. சொற்களையும் தாண்டிய பொருளை, உணர்வை நோக்கி கவிதை பயணம் மேற்கொள்ளும் தருணம் இது.

சித்ரா பௌர்ணமி

 நிலவில் தெறித்தது

யாருடைய ரத்தம்

இந்த மூன்று வரிகள் ஒரு பொருளை நமக்கு அளிக்கின்றன. இக்கவிதையின் தலைப்பு மரக்காணம். தலைப்போடு  சேர்த்துப் படிக்கையில் இது ஓர் அரசியலைப் பகிர்ந்துகொள்கிறது.

சூழலைப் பற்றிக் கவலைகொள்ளும் கவியின் மனது நுட்பமாக தன்னை வெளிப்படுத்துவதை இத்தொகுப்பு முழுக்கக் காண இயலும்.

ஆசிரியர் : பழநிபாரதி, வெளியீடு: குமரன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17