ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்

ராஜீவ் காந்தி படுகொலையில் சிபிஐ நடத்திய விசா ரணையில் ஏராளமான குழப்பங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி பல்வேறு நூல்கள் வெளிவந்துவிட்டன. அந்த விசாரணையே பல கோணங்களில் மறு விசாரணைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கால் நூற்றாண்டாக சிறையில் இருக்கும் நளினி, விசாரணை என்ற பெயரில் தான் எதிர்கொண்ட சித்திரவதை அனுபவங்களை நூலாக வெளிக்கொணர்ந்து இருக்கிறார். பத்திரிகையாளர் ஏகலைவனின் எழுத்தாக்கத்தில் இது வெளியாகி இருக்கிறது.

எதையும் மறைக்காமல் நடந்தது நடந்தபடியே விவரிக்கும் இந்த நூல் இளகிய மனம் படைத்தவர்கள் படிக்கக்கூடாத நூல். நளினி கைது ஆனபோது இரண்டுமாத கர்ப்பிணி. அவரை அறுபது நாட்கள் விசாரணைக்குள்ளாக்கியபோது நடைபெற்ற விசாரணை நடைமுறைகளை சித்திரவதைகளை அப்படியே விவரிக்கிறார். தன்னை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டு, கடைசியில் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்கள், சிறைக்குள் அடைக்கப்பட்ட பின்னர் குழந்தை பிறந்தது, அதற்கான அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் தான் இருந்தது என்று அவர் சொல்லிக்கொண்டே போகும்போது கட்டுப்படுத்தமுடியாமல் நம் கண்களில் நீர் ஆறாகக் கொட்டுகிறது. சிறைக்குள் பிறந்த மகள் பின்னர் இலங்கைக்குச் சென்று உறவினர்   அரவணைப்பில் வளர்ந்து இன்று லண்டனில் இருக்கிறார். அவரும் கூட லண்டனுக்கு படகில் புறப்பட்டுச் சென்று ஓர் இஸ்லாமிய நாட்டின் கடற்கரையில் ஒதுங்கி, மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட திகிலான நிகழ்வும்  நளினியால் சொல்லப்படுகிறது.

ஒவ்வொருமுறை தூக்குத் தண்டனை உறுதியாகும்போது அதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அவர் பட்ட துயரம் நெகிழ்வுக்கு உள்ளாக்குகிறது. கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 365 நாட்கள்  கணவனும் மனைவியுமாக நளினியும் முருகனும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைத்துறையிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த போராட்ட சமயங்களும் இதில் இடம்பெறுகின்றன.

நளினியின் மன உறுதியும் பல இடங்களில் மலைக்க வைக்கிறது. உறுதியாக இருந்திருக்காவிட்டால் அந்த குழந்தையை அவரால் வளர்த்திருக்கவே முடியாது. இன்றைக்கு தூக்குத்தண்டனை பெற்ற அனைவருக்குமே ஆயுள் தண்டனையாக அது குறைக்கப்பட்டிருக்கிறது. இனி சிறையிலிருந்து வெளியே வர இவர்கள் தொடர்போராட்டம் நடத்தவேண்டும். அது தனிக்கதையாகவே நீளும்.ராஜீவ் படுகொலையையொட்டி ஏராளமானபேர் கைதாகி, சித்திரவதை செய்யப்பட்டு நிர்க்கதியாக விடப்பட்டதன் பின்னிலும் சிறைக்குள் வாடவிட்டிருப்பதன் பின்னிருப்பது  ஒரு மிகப்பெரிய அரசு எந்திர  தடுப்பு நடவடிக்கையாக இன்றைக்குப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையில் நசுக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் துயரை எப்படிப் புரிந்துகொள்வது? இந்த நூல் அதற்கான ஓர் சிறந்த ஆவணம். இந்த நூலை சிறைக்குள் வாடும் நளினிக்காக ஒரு கணம் இரங்காமல், ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காமல் வாசித்துவிட யாராலும் இயலாது! அரஸ், புகழேந்தியின் ஓவியங்களும் ஏகலைவனின் சிக்கலற்ற மொழிநடையும் பாராட்டத்தக்கவை.

தொகுப்பு: பா.ஏகலைவன், வெளியீடு : யாழ் பதிப்பகம், எண் 10/61, 7வது தெரு, கம்பர் நகர், சென்னை- 82