நீந்திக்கடந்த நெருப்பாறு

தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்துமண்ணில் இருந்துதான் முகிழ்க்கவேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்வதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக  அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒருபகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும்  படைப்புகள். அதில் ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல்.  ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் போரிட்டுக்கொண்டே பின்வாங்கிக்கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் போரைச் சொல்கிறது இந்த நாவல். சிவம் என்கிற இளைஞன் ஓர்  அணிக்குத்தலைவனாக களமாடுகிறான்.  சிவம் புரியும் போர் முனைச்சாகசங்கள், காட்டுக்குள் ஆழ் ஊடுருவும் இலங்கை ராணுவத்தின்  அணியை வேவு பார்த்தால் போன்ற பல சம்பவங்கள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. சிவத்தின் போர்முனை அனுபவங்கள் ஒரு முனை என்றால் ஒவ்வொரு இடமாக காலிசெய்துகொண்டு பின்வாங்கும் குடும்பங்களின் கதை இந்நாவலின் இன்னொரு முனை. நன்கு விளைந்திருந்த மிளகாய் பழங்களைத் தாங்கிய செடிகள், வாழைத்தார்கள் கனத்துத் தொங்கும் தோட்டம் ஆகியவற்றை அப்படியே விட்டுவிட்டு நாடோடிகளாக பின்வாங்கிக் கொண்டே  இருக்கிறார்கள் மக்கள். உயிரிழப்பைக் குறைக்க புலிப்படை தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்து பின்வாங்கிக் கொண்டே இருக்கிறது. போர் நாவலுக்கே உரிய நெகிழ்வான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. எழுத்துரு, வடிவமைப்பில் கவனம் செலுத்தாமல் விட்டது குறை.

ஆசிரியர் : அரவிந்தகுமாரன்,வெளியீடு: தமிழ்லீடர் வெளியீட்டகம், ஆஸ்திரேலியா.

எம்.எஃப் உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி

இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடியான எம்.எஃப் உசேன் பற்றி ஓவியர் புகழேந்தி எழுதியிருக்கும் இந்த நூல் ஒரு நூற்றாண்டு இந்திய ஓவியக்கலையின் பல்வேறு கூறுகளை உசேனின் வாழ்க்கையின் வழியாகக் கூறுகிறது. இந்தூருக்கு அருகே  எளிய போரா இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்த உசேன் எந்த ஓவியக்கல்லூரியிலும் சேர்ந்து முறைப்படி பயிலவில்லை. ஆனால் அவருடைய 100 ஓவியங்கள் நூறு கோடிரூபாய்க்கு விலைபேசப்படும் அளவுக்கு உயர்கிறார். செருப்பணியாத அவரது கால்கள், உணர்ச்சிகளை மறைக்காத அவரது ஆளுமை, புகழ்பெற்ற மனிதர்களுடனான அவரது தொடர்பு, அவர் சந்தித்த சர்ச்சைகள், எதிர்கொண்ட வழக்குகள் என அனைத்தையும் குறித்து ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியர் : ஓவியர் புகழேந்தி வெளியீடு: தூரிகை,  குக63, 3வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென்னை 78.