வெள்ளையானை

எதுவும் செய்துவிட முடியாமல் துயரத்தை மட்டுமே அடைகின்ற ஒரு நிலையை எதிர்கொள்ளும்  மிக எளிய மனிதனின் மனவோட்டங்களும் அந்த இக்கட்டான காலகட்டத்தினை கடக்கிற தருணங்களும், சூழ்நிலைகளோடு போராடும் சாதாரண மனதின் அந்தரங்கமான உரையாடல்களுமாக நீள்கிறது ஜெயமோகனின் "வெள்ளையானை' என்கிற புதிய நாவல்.

வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெரிய பெரிய பாளங்களாக கொண்டுவரப்படும் ஐஸ்கட்டிகளே வெள்ளையானையாக இந்நாவலில் உருவகப்படுத்தபடுகிறது. அல்லது மிகச்சிறுபான்மை ஆங்கிலேயர்களால் அடக்கி ஆளப்பட்ட இந்தியா எனும் மாபெரும் தேசத்தையும் கூட யானையும் பாகனுமாக உருவகிக்கலாம். நாவலில் வருகிற ஏய்டனுக்கும் கூட இதே சந்தேகம் வருகிறது.. இவ்வளவு பெரிய யானை ஏன் இந்த சின்ன பாகனுக்கு அடிமையாய் இருக்கிறது?

1878ஆம் ஆண்டு சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த ஒரு வேலைநிறுத்தம்தான் நாவலின் களம். 300 தலித் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த எதிர்ப்பொலி.

தங்களோடு பணியாற்றிய ஒரு தொழிலாளியும் அவனுடைய மனைவியும் அமெரிக்க நிறுவன கங்காணிகளால் கொல்லப்பட அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கின்றனர். அதுதான் இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம் என்று குறிப்பிடுகிறார் நாவலின் ஆசிரியர். அந்த சம்பவம் குறித்து திருவிக தன் வாழ்க்கை வரலாற்றி எழுதியிருந்த இரண்டொரு வரிகள்தான் இவ்வளவு பெரிய நாவலை எழுதுவதற்கான துவக்கப்புள்ளியாகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார்.  இரண்டு தலித் தொழிளார்கள் கங்காணிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை  விசாரிக்க ஆரம்பிக்கிறார் அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து ஆங்கிலேய காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் ஏய்டன். அவருடைய பார்வையிலேயே அக்காலகட்டமும் சூழலும் மக்களின் வாழ்க்கையும் அவருடைய மனவோட்டங்களுமாக நாவல் விரிவடைகிறது.

ஐஸ்ஹவுஸில் வேலை பார்க்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக்கேட்க முனைகிறார் ஏய்டன். அவருக்கு ஓரளவு படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட தலித் இளைஞனான காத்தவராயன் உதவுகிறான். ஆதிக்க சாதியினரால் எப்படியெல்லாம் தலித்துகள் அடக்கப்படுகின்றனர். இந்தியா முழுக்க இந்த பஞ்சம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறான்.அந்த காலத்தில் சதுப்பு நிலமாக கிடந்த புதுப்பேட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஏழை தலித் மக்கள் வாழ்ந்த குடியிறுப்புக்கு அழைத்துச்சென்று காட்டுகிறான் காத்தவராயன். செங்கல்பட்டு பகுதியில் எங்கெங்கோ இருந்து பிழைப்பு தேடி சென்னையை நோக்கி வந்து பசியால் வாடி உடல்மெலிந்து சாகும் ஆயிரக்கணக்கான மக்களை பற்றியும் ஏய்டன் காத்தவராயன் மூலமாக தெரிந்துகொள்கிறான். அதை குறித்தெல்லாம் விளக்கமாக ஒரு அறிக்கையை தயார் செய்து அந்த காலக்கட்டத்தில் கவர்னராக இருந்த ட்யூக் ஆஃப் பக்கிங்ஹாமுக்கு அளிக்கிறான்.

அம்மக்களுக்கான நீதியை பெற்றுகொடுக்க முனையும் அவனுடைய போராட்டம் தோல்வியைச் சந்திக்கிறது. அதிகாரத்தின் முன் மண்டியிட்டு பெருந்தோல்வியை சந்திக்கிறான். மனமுடைந்து விபச்சார தொழிலில் ஈடுபடும் தன் காதலியான மரிஸாவிடம் சரணடைகிறான். நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான இடம் இதுதான். அதிகாரத்தின் உச்சியில் இருக்கிற ஏய்டன், விபச்சாரத்தொழிலில் ஈடுபடுகிற மரிஸாவின் முன் மண்டியிட்டு பாவமன்னிப்பைக் கோருகிறான்.அவள் மறுக்க அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்ள தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் பிழைத்துவிடுகிறான். அதற்கு பிறகு அவனும் அந்த அதிகாரத்தின் ஆற்றில் தன்னை கரைப்பதோடு நாவல் முடிகிறது. தாதுபஞ்சத்தால் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஏழ்மையை எப்படி தங்களுக்கு சாதகமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதிய ஆதிக்க சாதி வணிகர்களும் முதலாளிகளும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் நாவலில் விளக்கப்படுகிறது. அவர்களுடைய ஆதிக்கசாதி மானோபாவம் எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையும் சில காட்சிகளில் விளக்குகிறார். அடிப்பட்டு கீழே கிடக்கிற தலித்தை தூக்கச் சொல்லும் போது இரும்பினைப்போல நிற்கிற காளமேகத்தின் சிப்பிபோன்ற கண்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன.  

  • கே.கே

ஆசிரியர் :ஜெயமோகன் வெளியீடு: எழுத்து ,மதுரை.