செம்புலச் சுவடுகள்

தென்னார்க்காடு மாவட்ட கிராமங்களின் ஞாபகச் சுவடுகளை ஏக்கத்துடன் நினைவுகூரும் கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது கி.தனவே இ.ஆ.ப. எழுதியிருக்கும் செம்புலச் சுவடுகள் கவிதைத் தொகுப்பு. நவீன கால நகர்ப்புற வாழ்க்கையில் தான் இழந்துவிட்ட கிராமத்து அடையாளங்களை ஒவ்வொரு நாளும் நகருக்குள் வாழப் பணிக்கப்பட்ட கிராமத்துவாசி நினைவு கூர்கின்றான். நினைவில் கிராமம் சுமந்து அலையும் அவனது பெருமூச்சுக்கள் இங்கே கிராமத்து மொழியில் கவிதைகளாக உள்ளன.

ஆயாக்களிடம் விடப்பட்ட

அடுத்த தலைமுறை அறியுமா

அம்மாயிகளின் வாசம்?

என்று தன் அம்மாயியை நினைவுகூரும் கவிதையில் கேட்கும் இவர் தன் ஆசிரியர்களை, பள்ளித் தோழர்களை, நெய்வேலி சுரங்கத்தால் இடம்பெயர்ந்த கிராமத்தை, வீட்டுக்கு முதல் முதலாக வந்த  ரேடியோவை, சாமியாட்டத்தை என நினைவு கூர்ந்துகொண்டே போகிறார். ஊருக்குள் வரும் தாசில்தாரின் ஜீப் ஹாரனை அனுமதி வாங்கி அழுத்திப் பார்த்ததை சொல்லும் கவிதை ஒன்றைப்படிக்கையில் இவரது இ.ஆ.ப கனவு எங்கே முளைவிட்டிருக்கும் என்பது சட்டென்று பிடிபடுகிறது. கார்த்திகைத் தீபத்துக்கு பொறிப்பொறியாய் தீ கொட்டும் காத்திப் பொட்டலம்

சுற்றுவது பற்றிய நீண்ட கவிதை ஒன்று குறிப்பிடத் தகுந்தது. கிட்டத்தட்ட எல்லா கவிதைகளிலும் சின்னதாய் ஒரு பால்ய சம்பவத்தின் நினைவு ஏக்கத்துடன் உருவெடுக்கும் கவிதைகளாய் இவை அமைந்துள்ளன.

ஆசிரியர் : கி.தனவேல், வெளியீடு :இ.ஆ.ப.கௌதம் பதிப்பகம்,2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 600050.