காந்தி கணக்கு

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பற்றி பல தகவல்கள் அடங்கிய நூல். வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்வதற்காக டர்பன் நகரில் இருந்த வேதியன் பிள்ளை என்பவர் 5000 ரூபாயை அப்போது இந்தியா வந்த காந்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அப்பணத்தை காந்தி வ.உ.சியிடம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பல கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. மிகவும் மரியாதையுடன் நிகழ்கின்றன அக்கடிதப் போக்குவரத்துகள். மிகவும் பணக்கஷ்டத்தில் இருந்த சிதம்பரனாருக்கு அப்பணம் பெரிதும் தேவைப்படுகிறது. ஆனால் 1912ல் கொடுக்கப் பட்ட அத்தொகை 1920 வரை கொடுக்கப் படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை  இந்தியா வந்து காந்தியைச் சந்தித்து அப்பணத்தை வாங்கிக் கொடுக்கிறார். வட்டியோடு வரும் அப்பணத்துக்கு வட்டி வாங்க மறுத்துவிடுகிறார் வ.உ.சி. இரண்டு மேன்மக்கள் தொடர்பான இந்த சம்பவம்தான் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் காந்தி கணக்கு நூலின் சாராம்சம். இது அவர் கூட்டங்களில் பேசிய சொற் பொழிவுகளையும் அவற்றுடன் சில கட்டுரைகளையும் சேர்த்து தொகுக்கப்பட்ட நூலாக உள்ளது. காந்தி, வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் இதில்  இடம்பெற்றுள்ளன. வ.உ.சிக்கு நிதி அளித்த வேதியன் பிள்ளையின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்து அவர் தாயுமான சுவாமிகளின் பரம்பரையில் வந்தவர் என்றும் நூலாசிரியர் விளக்குகிறார்.

ஆசிரியர் : அனிதா கிருஷ்ண மூர்த்தி, வெளியீடு: சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம் இடுவம்பாளையம் திருப்பூர் 641687