அறப்போர் (குறுந்தகடு)

இந்த ஆண்டு தமிழக  மாணவர் இயக்கங்களுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்தது. மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டபோது அதில் திருத்தங்கள் இந்திய தலையீட்டின்மூலம் கொண்டு வரப்பட்டன. அத்திருத்தங்கள் இலங்கையை இனப்படுகொலை விசா ரணையிலிருந்து தப்ப வைப்பனவாக அமைந்தன.

இந்நிலையில்  பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட படங்கள் வெளியானதையொட்டி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் உண்ணாவிரதம் இருந்து ஆரம்பித்த போராட்டத்தீ தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களிடமும் உக்கிரமாகப் பரவியது. வகுப்புகளைப் புறக்கணித்து மாணவ மாணவியர் சாலைகளுக்கு வந்து இலங்கைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டம் பெருமளவுக்கு அரசியல் கட்சிகளை உள்ளே விடாமல் நடைபெற்றது. இதை அறப்போர் என்ற பெயரில் தொழில்நுட்ப ரீதியில் தரம்வாய்ந்த ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் வெற்றிவேல் சந்திரசேகர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரின் பேட்டிகள் மூலமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னால் பெரும் எழுச்சியுடன் நடந்த இப்போராட்டத்தின் கதை திரையில் விரிகிறது. செங்கொடி மீடியா ஒர்க்ஸ் வழங்கும் இப்படத்தைத் தயாரித்திருப்பவர் சி.கபிலன். படம் முடிகையில் வரும் பாடல் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வல்லது.

எழுத்து, இயக்கம்: வே.வெற்றிவேல் சந்திரசேகர்