டொமினிக்

பிப்ரவரி 12ஆம் தேதி, திருவண்ணாமலையிலுள்ள பவா செல்லதுரையின் பண்ணை வீட்டில் 'வம்சி புக்ஸ்' 12 புத்தகங்களை வெளியிட்டது. அவற்றில் பாதி மொழிபெயர்ப்புகள். பண்ணைக்குள் நிகழ்ச்சி நடந்த அரங்கமானது கருங்கல் ஒற்றைச்சுவரும், அதன் எதிரே கல் தூண்களின்மேல் ஓடும் வேயப்பட்ட திறந்தவெளி அரங்கம். பேச்சாளர்களின் ஆர்வத்தால் மதியம் இரண்டரை மணி தாண்டியும் ஆறு புத்தகங்களே வெளியிடப்பட்டன. பவாவின் இல்லத்திற்கு உணவருந்தச் சென்ற எங்களைக் கறிக்குழம்பின் வாசம் வரவேற்றது. 

சமையல் முடிய இன்னும் பத்து நிமிடமாகலாம்; அதற்குள் தன் சிறுகதைத் தொகுப்பான 'டொமினிக்'கை வெளியிட்டுவிடலாம் என்று யோசனை கூறிய பவா,'ஒரு புத்தகம் அச்சானவுடனேயே அதற்கு சிறகு முளைத்துவிடுகிறது', என்று ஜெயகாந்தன் கூறியதை மேற்கோள் காட்டினார்.இத்துணை உண்மை ஒரு தமிழ் எழுத்தாளனுக்குக் கட்டுப்படியாகுமா?
பவாவின் எழுத்தானது கரைகளற்ற,திசையற்ற காட்டாற்று வெள்ளம். மண்ணும் பாறைகளும் 
சுழித்துவரும் இந்த நீரோட்டத்தில் செல்லதுரை 
சொல்வதுபோலக் காட்டுப் பூக்களும் நொனாப் பழமும் களாக்காயும் மூலிகைகளும் அடித்து வருகின்றன. இதன் மணமும் ருசியும் சலசலப்பும் தமிழ் வாசகர்களுக்குப் புதிதான கிறக்கத்தையளிக்கின்றன.

இந்தக் கதைகளில் பெரும்பாலும் மையக் கதாபாத்திரமில்லை. தனித்துவமான கதைமாந்தர்கள் குறைவாகவே பேசுகிறார்கள்."கரடி' கதையின் புலிவேடக்காரன், தனக்குப் பரிசாய்க் 
கிடைத்த ஒரே ஐம்பது ரூபாயை சக கிருஷ்ண வேடதாரியின் மார்பில் குத்தி அழகு பார்க்கிறான்."பிடி' கதையில் அறம் சீறுகிறது. திருட்டைப் பற்றிய "வலி'யில் மனித மனத்தின் விசித்திரமும் அடியாழத்து ஈரமும் மின்னலாய் வெட்டுகின்றன. இப்படி ஒன்பது 
சிறுகதைகளும் வெவ்வேறு களங்களில். எல்லோரும் திளைத்து அனுபவிக்க வேண்டிய வெள்ளமிது.

- பா.கண்மணி

டொமினிக், பவா செல்லதுரை, வெளியீடு: வம்சி புக்ஸ் 19, டி.எம்.சாரோன் திருவண்ணாமலை606 601.