
பத்மினியுடன் போட்டி நடனம்!
நடிகர் எஸ்.வி.ரங்கராவ் என்றால் பாதாள பைரவியில் பயங்கரமான மந்திரவாதி, மாயபஜாரில் வரும் கடோத்கஜன் பாத்திரங்கள் நினைவுக்கு வரும். பல படங்களில் முதிய தோற்றங்களில் பல்வேறு குணச்சித்திர, வில்லன் பாத்திரங்களில் நடித்த தோற்றங்கள் நினைவுக்கு வரும். ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்த ரங்காராவ், நாடகம் மீதுள்ள ஆர்வத்தால் அரசு வேலையை உதறிவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்தவர். தமிழிலும் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் அற்புதமான பல பாத்திரங்களைச் செய்து நினைவில் நிற்பவர். அவருடைய தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்களைப் பற்றிய அரிய தகவல்கள், அரிய புகைப்படங்கள் அடங்கிய நூலாக இதை எழுதி இருக்கிறார் திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன். தெலுங்கு, தமிழ்
சினிமா ஆர்வலர்கள், ஆய்வாளர்களுக்கு இந்நூல்
சிறந்த தீனி. சீனப்பிரதமர் சூ என் லாய் 1957-ல்
சென்னைக்கு வந்தபோது ஜெமினி ஸ்டூடியோவில் படப்பிடிப்பைப் பார்க்கப் போனார். அப்போது சதிசாவித்திரி படத்தில் எம தர்மன் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த எஸ்.வி.ரங்கராவ் நடிப்பையும் அவர் பார்த்தார். எஸ்,வரலட்சுமி, ரங்காராவ் ஆகியோர் சீனப்பிரதமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இந்நூலில் உள்ளது. எமன் வேஷத்தில் ஜம்மென்று ரங்காராவ் நிற்க, சூ.என்.லாய் சிரிக்கிறார். நானும் ஒரு பெண் படத்தில் வயது முதிர்ந்த மாமனாராக வரும் ரங்காராவை மறக்க முடியுமா? மோகினி பஸ்மாசுரா என்று ஒரு தெலுங்குப் படம். அதில் பத்மினியுடன் போட்டி நடனம் ஆடியிருக்கிறார் ரங்காராவ் என்றால் நம்பமுடிகிறதா?
திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன்,
வாலி பதிப்பகம், தாமிரபரணி, எம்.18, இரண்டாவது தெரு, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-89 பேச:044-49596311 விலை ரூ 200