மணல்

நதியின் குரல்!

 

ஆறுகளைத் தோண்டி மணலை அள்ளி இயற்கையின் குருதியைக் குடிக்கும் மனிதர்களைப் பற்றிய நாவல், மணல். கரிசல் மண்ணின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான பா.செயப்பிரகாசம், அதே

வாசத்துடன் கூடுதலாக ஆவேசத்துடன் இந்த நாவலைப் படைத்துள்ளார். மணல்தாதாக்கள் தனி மனிதர்கள் அல்ல, அவர்களே அரசாங்கம்; அரசாங்கமே அவர்கள். இவர்கள் பினாமிகள். வன்மம், பழி எடுத்தல் என்ற குயுக்தி முதல் கூர்மையான ஆயுதங்கள் வரை ஏந்தியவர்கள்- என முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 2004 முதல் 2013 வரையிலான பத்து ஆண்டுகளில் மணல் அள்ளி எடுக்கப்பட்ட வைப்பாறு என்கிற ஆறு காணாமல் போன கதை இது. அத்துடன் சுற்றிலும் இருக்கும் கிராம மக்கள் இறுதியில் கையில் பையுடன் கூலி வேலைகளுக்குப் பேருந்து ஏறிச் செல்கிறார்கள். விவசாயம் பொய்த்துப்போய், நிம்மதியைத் தொலைத்து நிற்கும் மனிதர்களைப் பற்றிய விவரணையுடன் நாவல் முடிவடைகிறது. இந்த வைப்பாற்று மணல் கொள்ளையை எதிர்த்து போராடிய மக்கள், அவர்களை தந்திரமாகவும் துரோகம் மூலமும் முறியடித்த மணல்வாரிகள், அரசு எந்திரங்கள் ஆகியவை பற்றி விவரித்து ஒரு வீழ்ச்சியின் வாக்குமூலத்தை நம் முன் வைக்கிறார் பா.செ. சுரண்டப்பட்டு தவிக்கும் வைப்பாறு, கைவிடப்பட்ட ஆதித்தாயாக நம் முன்னே எழுந்து நிற்கிறது. அவள் வடிக்கும் கண்ணீர் சுடுமணலில் வீழ்ந்து ஆவியாகிறது, அப்பாவி கிராம வாசிகளின் வாழ்வைப்போல.

பா.செயப்பிரகாசம், வெளியீடு: நூல்வனம், எம்22,ஆறாவது நிழற்சாலை, அழகாபுரி நகர், ராமாவரம், சென்னை-89. பேச: 9176549991

விலை : ரூ 210