சொற்களில் சுழலும் உலகம்

கதைகளைச் சேகரிப்பவர்

 

தமிழ் இலக்கியத்தில் பகடி என்பது அரிது. அதுவும் புலம் பெயர் எழுத்தில் துயரமே இருக்கும். ஆனால் செல்வம் அருளானந்தம் எல்லா துயரையும் பகடியால் கடப்பவர். லண்டனில் குண்டு வெடித்து கடுமையான பாதுகாப்பு பரிசோதனைகள். ஹீத்ரு விமானநிலையத்தில் வரிசையில் நிற்கிறார் செல்வம். தன் முகமும் நீளமான பெயரும் தன்னை சந்தேகத் துக்கு உள்ளாக்குபவை என்று பரிதவிக்கிறார். வரிசையில் வரும் இவரை சோதிக்கும் பெண் காவலர், காலணிகள், பெல்ட் என்று கழற்றிவிட்டு கையைத்தூக்கச் சொல்கிறார்.

 

அந்தோ பரிதாபம். இவரது இடுப்பில் பாண்ட் நிற்பதில்லை! பெல்ட் இல்லாமல் கழண்டு விழுந்துவிட, மனிதர் அப்பவும் கடமையில் கண்ணாக இரு கைகளையும் தூக்கிக்கொண்டே நிற்கிறார்! இப்படி எல்லா சூழல்களையும் சிரிப்பு வரும் படியாக எழுதிச் செல்லும் இவரது தன் விவரக்குறிப்புகளாக இந்த நூல் அமைந்துள்ளது. கனடாவில் வசிக்கும் நூலாசிரியர் இலங்கையில் இருக்கும் சொந்த ஊருக்கு வரும்போதும் எல்லாவற்றையும் இப்படியே பகடியாகப் பார்த்தாலும் அவற்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் துயரத்தின் கரங்கள் நம்மைத் தழுவிக்கொள்கின்றன.

 

 “ஓம். நான் என் மண் கடமையைச் செய்திருக்கிறேன். 27 பேரை முள்ளிவாய்க்காலில் அடக்கம் செய்தன் என்ரை அப்பர் உட்பட” என்று நாயகம் என்கிற மனிதர் செல்வத்திடம் தன் கதையை விளக்கும்போது வாசிக்கும் நமக்கும் சிலிர்க்கிறது. செல்வம் சந்தித்த மனிதர்களில் நாயகம் முக்கியமானவர். நாம் வாசித்தறிந்த மனிதர்களிலும் நாயகம் முக்கியமானவர்தான்! செல்வத்தின்

சொற்களின் சுழற்சியில் நாம் காண்பவை மென்னகையில் உறைந்திருக்கும் கண்ணீரின் கதைகள்; குருதி பிசுபிசுக்கும் அனுபவங்கள் என்று பின்னட்டையில் சுகுமாரன் எழுதியிருப்பது அசலான உண்மை!

செல்வம் அருளானந்தம்,வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கேபி சாலை, நாகர்கோவில் 629001.

விலை : ரூ 190