தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை

களஞ்சியத்தின் கதை

சின்ன நூல்தான். 90 பக்கம்தான்.  தமிழில் முதன்முதலாக கலைக் களஞ்சியம் உருவான விதத்தை ஆ. இரா.வேங்கடாசலபதி ஒரு நாவலைப் போல் எழுதி இருக்கிறார். உலகிலுள்ள அனைத்து அறிவையும் திரட்டி பொருள்வாரியாக அகரவரிசையில் வழங்குவது என்சைக்ளோபீடியா எனப்படும் கலைக்களஞ்சியம். தமிழர்களின்  நூற்றாண்டுக் கனவான இந்த களஞ்சியம் எப்படி உருவானது? காங்கிரஸ் அரசியல்தலைவரான தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரின்  முன்னெடுப்பில் 7500 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக 1953- 1968 வரை இது வெளியாகி இருக்கிறது. இந்த பணியில் தலைமைப் பதிப்பாசிரியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பெரியசாமி தூரன். முதலில் 18 லட்சரூபாய் ஆகும் என்று திட்டமிடப்பட்ட இந்த பணி, பிறகு பத்துலட்சரூபாய் என குறைக்கப்பட்டு அரசிடம் நிதிவேண்டப்பட்டது. பொதுமக்களிடம் நன்கொடை திரட்டப்படுகிறது. மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்த  சண்முகம் செட்டியார் மூலமாகவும் 3 லட்ச ரூபாய் நிதி பெறப்படுகிறது. இந்த நிதியெல்லாம் அரும்பாடு பட்டுத்தான் திரட்டுகிறார்கள். குறைந்த சம்பளத்தில் இந்த கலைகளஞ்சியக் குழு வேலை செய்கிறது. பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது. 15 ஆண்டுகள் தலைமைப் பதிப்பாசிரியராக தூரன் பணிபுரிந்து இந்த வேலையை முடிக்கிறார்.

இந்த சிறுநூலை காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு வாசிக்க அளித்தேன். புரட்டியவர் அவினாசிலிங்கம் செட்டியாரின் பெயரைப் பார்த்ததும், “இவர் எங்கள் காங்கிரஸ்

கட்சிக் காரர்தான். தமிழுக்கு காங்கிரஸ் காரர்களும் தொண்டாற்றியிருக்கிறோம் தெரியுமா?” என்று பெருமிதமும் ஆர்வமும் கொண்டார். அவசியமான பெருமைதான் அது!

தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை, ஆ.இரா.வேங்கடாசலபதி, வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669, கேபி சாலை,

நாகர்கோவில்- 629001