ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்

பயணச் சுவடுகள்

தமிழின் முதல் பயணநூல் என்று அறிமுகப்படுத்தப்படும் இந்நூல் 150 ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் வட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பயணக்குறிப்புகளைக்  கொண்டுள்ளது. சே.ப.நரசிம்மலு நாயுடு வட இந்திய நகரங்கள் முழுக்க ஆங்கிலேயர் ஆட்சி நடந்த அந்த காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டதுடன் ஒவ்வொரு ஊரின் வரலாற்றுக் குறிப்புகளையும் இதில் விளக்கமாக எழுதியுள்ளார். இந்திய வரலாறு தெளிவாகத் துலங்காத அக்காலத்தில் அவர் ஓரளவுக்கு இவற்றை எழுதி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. 1885-ல் பம்பாயிலும் 1886-ஆம் ஆண்டில் கல்கத்தாவிலும் நடைபெற்ற காங்கிரஸ் சபைகளில் பங்கேற்க நரசிம்மலு நாயுடு வடநாடு சென்றுள்ளார். அந்த பயண அனுபவங்களைத் தொகுத்து 1889-ல் முதல் பதிப்பும் அதைத்திருத்தி 1913-ல் இரண்டாம் பதிப்பும் வெளியிட்டுள்ளார்.

சராசரியாக இல்லாமல் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டாடுவது இந்த நூல் முழுக்க இவரது வழக்கமாக உள்ளது. அன்றைக்கு இருந்த சாதி மத வழக்கங்கள், ஆங்கில ஆட்சியை கேள்வி இன்றி ஏற்றல் போன்ற பின்னணியில் இருந்துதான் இவரது எழுத்தைப் பார்க்கவேண்டும். இந்நூலுக்கு சிறந்த ஒரு பதிப்புரையை எழுதி உள்ளார் இதன் பதிப்பாசிரியர் ந.முருகேசபாண்டியன். அது இந்நூலை வாசிப்பதற்குத் தேவையான தரவுகளை முன்கூட்டியே தருகிறது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முந்தைய வட இந்தியாவின்

சித்திரத்தை ஒரு திராவிட மனத்தின் மூலமாக இந்நூல் தமிழில் தருகிறது என்பதே முக்கியமானது.

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம், சே. ப.நரசிம்மலு நாயுடு, வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர் மேற்கு,

சென்னை-600078