கலாதீபம் லொட்ஜ்

துயரங்களின் விடுதி

வாசு முருகவேல் எழுதி இருக்கும் இரண்டாவது நாவல். ஈழத்தில் நயினா தீவில் இருந்து புறப்பட்டு புலம பெயர்வதற்காக கொழும்புவுக்கு வரும் குடும்பம் ஒன்று அங்கே வழக்கமாக இதற்காக வருகிற ஆட்கள் தங்கக்கூடிய கலாதீபம் விடுதியில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு அச்சமேலீட்டால் விருப்பமே இல்லாமல் கிளம்பிவருகிறார்கள்.. கனடாவுக்கு முன்னமே சென்றிருக்கும் இக்குடும்ப பெண் அங்கிருந்து இவர்களின் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். கடவுச்சீட்டு, மருத்துவப்

பரிசோதனை என்று நாட்கள் ஓடுகின்றன. இடையில் இவர்களின் விடுதியில் தங்கியிருக்கும் பையன் ஒருவனின் காதலி புலி என பிடிபடும் தருவாயில் சையனைடு சாப்பிட்டு இறந்துவிடுகிறாள். அறியாத அந்த அப்பாவிப் பையனை போலீஸ் பிடித்துப்போகிறது. ஏற்கெனவே காவலில் இருக்கும் இன்னொரு இளைஞனின அம்மா  அந்த விடுதியில் தங்கி இருக்கிறார். அவருடன் இந்த இளைஞனின் அம்மாவும் இணைந்துகொள்கிறார். சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாகும் மகன்களைப் பார்க்க அந்த தாய்மார்கள் செல்கிறார்கள். விடுதியில் ஒவ்வொரு அறையிலும் தங்கி இருக்கும் ஆட்கள், அதன் நிர்வாகி, உரிமையாளர், காசு வாங்கிகொண்டு போகும் போலீஸ், பயண ஏற்பாடு செய்யும் நபர், தெருவில் சிறுவர்கள் ஆடும் கிரிக்கெட், பழைய ஜேவிபி ஆள் என்று கலந்துகட்டி கலாதீபம் லொட்ஜ் கண்முன்னே ஒரு காலகட்டத்தை நிறுத்துகிறது. அது கடத்தும் வலி, புலம்பெயர்தலின் துயரங்களை நம் முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. அந்த எளிய கிராமத்துக் குடும்பம் விமானமேறி கனடாவுக்குச் செல்லவேண்டுமே, எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று நினைத்துக்கொள்கிறோம். கூடவே வடக்கு- கிழக்கு பிராந்தியங்களிலிருந்து கொழும்புக்கு பிழைக்க வந்து சின்னாபின்னாமான இளைஞர்களின் வாழ்வும் துயரத்தைக் கூட்டுகிறது.

கலாதீபம் லொட்ஜ், வாசு முருகவேல், கிழக்கு, 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை,  ராயப்பேட்டை, சென்னை-14