ஒவ்வொரு கணமும்

கவிதைக் கணங்கள்!

இரவு பதினோருமணிக்கு சுகதேவ் உறங்கப்போகையில் அல்லது விழித்திருக்கையில் அந்த ஒலியைக் கேட்டிருக்கவேண்டும். அது ஒரு காகத்தின் குரல்! விடிந்துவிட்டதென்று அடையாளப்படுத்துவது பறவைகளின் குரல். அந்த நள்ளிரவில் காகத்தை ஒலியெழுப்ப எது வைத்திருக்கும்? மாறிக்கொண்டு வரும் இந்த உலகின் முகங்களை, வழக்கங்களை அந்த காகத்தின் குரல் இவருக்கு ஞாபகமூட்டியதா? எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. மனிதன் மட்டும் தனி அடையாளம் காக்கப் போராடுகிறான் என்று தன் கவிதை மூலம் நகைத்துப் பார்க்கிறார் சுகதேவ். அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் அரசியல், போராட்டம், அன்பு, தினசரி செய்திகள், தத்துவம், கடவுள் என எல்லாவற்றையும் கவிதையாக்கிப் பார்க்கிறார் சுகதேவ். நீண்ட பத்திரிகை அனுபவம் கொண்டவர் என்பதால் இவற்றை விடுத்த மனம் என்பது வாய்க்கவே போவதில்லை. கவிஞர் என்றாலும் இதிலிருந்து விடுபடவே முடியாதுபோலிருக்கிறது. ஆகவே தலைப்புக் கேற்ப ஒவ்வொரு கணமும் கவிதைதான்.

அவர் வள்ளல்தான்/ வாரி இறைப்பார்/ ரகசியங்களை- என்ற வரியை ஒரு இதழாளர் தான் எழுதமுடியும். காலம் நிழலற்றது/ யாரும் ஒதுங்க முடியாது- என்ற அழுத்தமிகு வரிகளை ஓர் இதழாசிரியரால் மட்டுமே உணர்ந்து எழுத முடியும். சற்று ஒதுங்கினால் அடுத்த நாள் காலையில் செய்தித்தாள் வெளிவராது.

இத்தொகுப்பில் இருக்கும் கவிதைகளில் உரையாடல்தன்மை ஓங்கி இருக்கிறது. உலகைப் பார்த்து நகைத்துத் தாண்டிச் செல்லும் விட்டேத்தியான தன்மையும் இருக்கிறது. ஆனால்  ‘நான் போட்டியில் இல்லை’ என்ற கவிதை இதற்கு மாறாகவும் இருக்கிறதே! கவிஞர் சொல்வதுபோல் இத்தொகுப்பை எப்படிப் பதிவு செய்வது என்று புரியாமல் வரலாறு திணறட்டும்!

ஒவ்வொரு கணமும் - சுகதேவ், வெளியீடு: நோஷன் பிரஸ், . எண் 38, பு.எண் 6 மெக்நிக்கல்ஸ் சாலை,

சேத்துப்பட்டு, சென்னை -31