வீரப்பன்

காட்டு ராஜாவின் கதை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீரப்பன் என்றால் பத்திரிகைகளுக்கு சூடான செய்தி. அவனை யார் என்றே தெரியாமல் காவல்துறை கொடுத்த ஒரேயொரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்த காலத்தில் நக்கீரன் இதழ் சார்பாக அவனை சந்தித்து நேர்காணல்கள் செய்யப்பட்டன. இதழாசிரியர் நக்கீரன் கோபாலும் கூட காட்டுக்குள் துணிச்சலுடன் சென்று பேட்டிகள் எடுத்து வந்திருந்தார். இந்திய இதழியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படும் இந்த செய்திக் கட்டுரைகள் வெளியான காலத்தில் மிகப்பரபரப்புடன் வாசிக்கப்பட்டன. காட்டுக்குள் எடுக்கப்பட்ட பேட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின. இதற்காக வழக்குகளையும் அந்த பத்திரிகை எதிர்கொண்டது. வீரப்பன் கொல்லப்பட்ட நிலையில் அவனைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் கூட வெளியாகிவிட்டன. ஆனாலும் காட்டுக்குள் ஒளிந்திருந்து இரு மாநில காவல்துறைக்கு சவால் விட்ட அவனது கதை இன்னும் சுவாரசியமாகவே உள்ளது. வீரப்பனின் குரலில் அவன் தன்னிடம் சொன்ன விஷயங்களைத் தொகுத்து வீரப்பன் - 16000 சதுர கிமீ காடுகளை ஆண்ட காட்டுராஜாவின் கதை என்று வெளியிட்டுள்ளார் நக்கீரன் கோபால். சிவசுப்பிரமணியன் முதல் நேர்காணலை எடுத்து வந்ததும் அது சன் டிவியில் ஒளிபரப்பானதும் உருவான பரபரப்புகளும் மிக விறுவிறுப்பாக உள்ளன. சன் டிவியுடன் ப்ரைம் டைமில் வெளியிட என்ன மாதிரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது போன்ற தகவல்களையும் வெளிப்படையாகக் கூறி உள்ளார். முதலில் சன் டிவி வழங்கும் நேருக்கு நேர் என வெளியிடப்பட, அதை நக்கீரன் வழங்கும் நேருக்கு நேர் என மாற்றி வெளியிடுமாறு கோபால் போராடியதும் ஆச்சர்யம் அளிக்கும் தகவல்கள். கையில் உடும்புடன் பேபி வீரப்பன் இருக்கும் படம் தொடங்கி, சட்டைக்குள் தோட்டாக்கள் புடைத்திருக்க கனத்த மீசையுடன் வீரப்பன் தோன்றும் படங்கள் வரை அருமையான புகைப்படங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. கெட்டி அட்டையில் அழகான வடிவமைப்பில் இந்நூல் வெளியாகி உள்ளது

வீரப்பன், நக்கீரன்கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை,

சென்னை-14