புன்னகைக்கும் பிரபஞ்சம்

பருக கொஞ்சம் கபீர் :

 பதினைந்தாம் நூற்றாண்டில் காசி அருகே வாழ்ந்திருந்த கபீர் பாடிய பாடல்கள் வட இந்தியாவில் மிகப்பிரபலமாகப் பாடப்படுகின்றன. இந்தி மொழி இலக்கியத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இஸ்லாமிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்த இவரது பாடல்கள் இரு மதத்தவராலும் கொண்டாடப்படுகின்றன. மதங்களைக் கடந்து, இறைவன் ஒருவனே என்பதை அடிப்படையாகக் கொண்ட இவரது பாடல்கள் வெகுமக்களின் பாடல்களாக அங்கேப் பாடப்படுகின்றன. இவற்றை நவீன கவிதைகளை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் செங்கதிர். பல பரம்பரைகளாக மெருகேற்றப்பட்டு வந்த கவிதைகளின் தொகுப்பே இன்று கபீரின் கவிதைகளாக நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் இவர். கபீரின் கவிதைகளை தமிழக பக்தி இலக்கியத்துக்கும் சித்தர்பாடல்களுக்கும் இடையே வைத்துப் பார்க்கமுடியும் என்கிறார் செங்கதிர். முழுமையான சரணாகதியையே வீடுபேறடையும்வழியாக வலியுறுத்தும் கபீரின் உலகம், தமிழ் வாசகர்களுக்கு புதிய அனுபவமாக அமைகிறது.

வாசிக்க மிக எளிமையாகத் தோன்றும் இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளில் ஒளிந்திருக்கும் கபீரின் ஆன்மாவைத் தரிசிக்க நிதானமான அணுகுமுறையும் தத்துவத்தேர்ச்சியும் இருந்தால் மிக நன்று. மேம்போக்காகப் படிப்பவர்களுக்கும் வெளிச்சத்தை தரவல்லவை இந்த வரிகள் என்பதே இதன் சிறப்பெனலாம்.

குருடனுக்கு வாய்த்தது துல்லியப்பார்வை

பார்வை வாய்த்த கண்களுக்கோ

ஒன்றும் புலப்படவில்லை

......

நீ தேடுவது உண்மையெனில்

மின்னிமறையும் கணங்களில் கிடைத்திடுவேன்.

.....

எல்லோரும் கபீரின் மீது சேற்றைவாரி இறைக்கிறார்கள்.

இறைத்தவர்கள்

மூழ்கிப்போக

நானோ கடலில் மிதந்து

கரை ஏறினேன்.

கபீரை வாசிப்பது வெறுமனே வாசிப்பு மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல் அனுபவம். இந்திய ஆன்மிக மரபொன்றின் மீதான வழிப்பயணம். இந்த தொகுப்பு அந்த பணியைச் செவ்வனே செய்கிறது.

புன்னகைக்கும் பிரபஞ்சம், தமிழில்: செங்கதிர், வெளியீடு: காலச்சுவடு, 669, கேபி சாலை, நாகர்கோவில்-629001.