நன்மாறன் கோட்டைக் கதை

பெண்மையின் குரல்:

 ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இமையம் தனக்கே உரிய பாணியில் சமூக, அரசியல் பார்வைகளை இச்சிறுகதைகளில் பதிவுசெய்திருக்கிறார். முதல் சிறுகதையும் இரண்டாம் சிறுகதையும் ஒரே விஷயத்தை இரு கோணங்களில் பார்த்திருக்கின்றன.

சாதிவெறியர்களால் சுளுக்கியால் குத்திக் கொல்லப்பட்டவனின் மனைவியின் கதை முதலாவது. இரண்டாவது சிறுகதையான போலீஸ், தாழ்த்தப்பட்ட ஒருவனின் பிணத்தைத் தூக்கிச் செல்லப் பணிக்கப்பட்ட ஆதிக்கசாதி காவலர் ஒருவனின் குமுறல். இவன் வேலையே வேண்டாம் என்று விலகுகிற அளவுக்கு

சாதிவெறி ஊறிப்போய்க் கிடக்கிறது. இந்த இருகதைகளில் ஓரிடத்தில்கூட தலையிடாமல் இமையம் தன்னை ஓர் ஊடகமாக மட்டும் வைத்து, தன் படைப்பாற்றலின் உச்சகட்டத்தில் இக்கதைகளை நிகழச் செய்கிறார். பணியக்காரம்மா என்றொரு சிறுகதை இத்தொகுப்பில் உள்ளது. இமையம் தொடர்ந்து எழுதிவரும் பெண் மனதின் இன்னொரு வடிவம் இக்கதையில் பதிவாகிறது. செட்டியின் காதலுக்காக தன் வாழ்வைக் கொடுக்கும் தெருவோர வியாபாரம் செய்யும் பெண்ணின் மனது அது. தலைக்கடன் என்ற கதையில் பெண்ணின் மனது அதன் உச்சகட்ட ஆங்காரத்துடன் கணவனுக்குப் பிறந்த தன் குழந்தையை அவனுடையதே அல்ல என்று உரக்கச் சொல்கிறது. சாந்தா என்ற கதையில் சித்தாள் வேலைபார்க்கும் பெண்ணின் மனம் கொள்ளும் மானுட உச்சத்தைப் பதிவு செய்கிறார். தொலைந்துபோன நகைக்காக கோவில் சாமியிடம் விண்ணப்பம் செய்து சீட்டு எழுதிக் கட்ட வரும் பெண்ணின் கதையோ மிகப்பரிதாபம். இந்த ஒவ்வொரு கதையிலும் அப்பெண்களைப் பாதியில் விட்டுவிட்டு சிறுகதை முடிந்துபோகிறது. அவர்களின் மீதி வாழ்வை யார் எழுதுவது? வாசகனே மனதில் எழுதி உருகிப் போகவேண்டியதுதான். இமையம் எழுதும் அளவுக்கு சாமானியப் பெண்களின் வாழ்வை எழுதும் எழுத்தாளர் யாரும் இங்கே தற்சமயம் இருப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன்  சமகால அடித்தட்டு கட்சி அரசியலைப் பேசும் இரண்டு சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கொஞ்சம் உற்று நோக்கினால் இக்கதைகளில் இடம்பெற்றுள்ள சமகால அரசியல்வாதிகளை அடையாளம்கூடக் கண்டுகொள்ளலாம். இக்கதைகளில் புழங்கும் யதார்த்தம் நெஞ்சில் அறைவது. நேர்மையானது. எளிதில் மீண்டுவரவிடாமல் உணர்வுகளின் சுழலில் வாசகர்களைச் சிக்க வைப்பது.

நன்மாறன் கோட்டைக் கதை,

இமையம், க்ரியா, புது எண் 2 பழைய எண் 25,17, கிழக்குத் தெரு, காமராஜர் நகர்,திருவான்மியூர், சென்னை 41