பிரயாகை

பலிகொள்ளும் தேவதை

 ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையில் ஐந்தாவது நாவல் பிரயாகை. துருவன் விண்ணில் நிலையாமை என்பதை விழைந்து ஒரு நட்சத் திரமாக ஜொலிக்கும் கதையில் தொடங்குகிறது. துரோணரின் குருநிலையில் பயிற்சியை முடிக்கும் கௌரவர்களும் பாண்டவர்களும் அவருக்காக பாஞ்சால மன்னன் துருபதனை எதிர்கொள்கிறார்கள். அர்ஜுனன் அவரைத் தோற்கடித்து தேர்க்காலில் கட்டி இழுத்து துரோணர் முன் போடுகிறான். அக்கணத்தின் அவமானமும் வஞ்சமும் தாங்க இயலாமல் துருபதன் தவிப்பதையும் அதர்வ வேத வேள்விகள் செய்து திரௌபதியையும் திருஷ்டதுய்மனையும் பெற்றெடுப்பதையும்

சொல்லிச் செல்கிறது. இந்நாவலில் திரௌபதியை மணத்தன்னேற்பு வில் போட்டியில் அந்தணர் வேடத்தில் இருக்கும் அர்ஜுனன் வெல்வதே உச்சக் கட்டம். மகாபாரத்தில் இருக்கும் இடைவெளிகளை தன் கற்பனையின் மூலம் நிரப்புவதன் மூலம் ஒழுங்கான கதையோட்டத்தை தருகிறார் ஜெயமோகன். இடும்பர்கள் என்னும் பிற மானுடரை நெருங்க விடாத இனக்குழுவின் தலைவன் இடும்பனை வென்று இடும்பியை பீமன் கைப்பிடிக்கும் தருணங்களும் அவர்களுக்கு கடோத்கஜன் பிறப்பதுமான கதையும் இந்நாவலின் போக்கில் இடம்பெற்றுள்ளன. டேய் பானை மண்டையா என்று கொஞ்சி அதே பொருளில் கடோத்கஜன் என்று பெயர் சூட்டும் பீமன், ஒரு கணம் தன் மைந்தனின் அசாத்திய பலம் கண்டு அஞ்சும் அல்லது பொறாமைப்படும் தருணமும் வந்துபோகிறது. பெரும் பலிகளைக் கொள்ளப்போகும் பெண் தெய்வமென திரௌபதி மெல்ல உருக்கொள்வதுடன் இந்நாவல் முடிவடைகிறது. மகாபாரத்தின் பல்வேறு கிளைக்கதைகளின் அத்தனை சாத்தியங்களையும் கொண்டு, ஒரு மாபெரும்

கதைசொல்லி, புனைந்து செல்லும் நாவல்தொடரின் ஒரு பகுதியாக பிரயாகை நிலைகொள்கிறது.

பிரயாகை, ஜெயமோகன்,வெண்முரசு நாவல் வரிசை, கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,

சென்னை-14