சேப்பியன்ஸ் -மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

கடவுளான ஒரு விலங்கினம்!

சேப்பியன்ஸ் என்கிற மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, தற்போதைய நிலை ஆகியவற்றைப் பற்றி மனித குலம் இதுவரை கண்டறிந்து வைத்திருக்கும் விஷயங்களை எல்லாம் ஒரே புத்தகத்தில் வாசிக்க வேண்டுமானால் யுவால் நோவா ஹராரியின் இந்த புத்தகத்தைத் தவறவிடக்கூடாது. சேப்பியன்ஸ் ஆன இருக்கும் நாம் மட்டுமல்ல இப்புவியில் வாழ்ந்தது. நம்மைப்போலவே நியாண்டர்தல் மனிதர்கள், ஹோமோ எரக்டஸ் மனிதர்களும் வாழ்ந்துள்ளனர். சேப்பியன்ஸ் மற்ற மனித இனங்களை கொன்றொழித்துவிட்டு, இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறோம் என்று அதிரடியாகத் தொடங்கும் இந்நூல் சேப்பியன்ஸின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்களின் அறிவுத்திறனில் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒருபுரட்சிகரமான மாற்றம் என்கிறது. இந்த அறிவுப்புரட்சிக்கு அடுத்து மனித குலத்தைத் தீர்மானித்தது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வேளாண்புரட்சி. அதன்பின்னர் சமீபகாலத்தில் உருவான அறிவியல் புரட்சி, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மனிதர்களை உருவாக்கி உள்ளது. நாம் கடவுளாக மாறிய ஓர் விலங்கு என்று முடிகிறது இந்தபுத்தகம். இந்த நூலை தமிழ்ப்படுத்தியிருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். இதைத் தமிழ்ப்படுத்த எத்தனைக் கலைச்சொற்கள் தேவை என்பதை இந்நூலை ஆங்கிலத்தில் படித்தவர்கள் உணர்ந்திருப்பர். ஆனால் அந்த சவாலை நேர்மையாக எதிர்கொண்டு வென்றுள்ளார் மொழிபெயர்ப்பாளர்.

இந்த நூலை தமிழின் அறிவுலகுக்கு ஒரு கொடை என்றே சொல்லலாம்! ஆனால் தமிழனே உலகுக்கு மூத்தகுடி என்ற நோக்கில் அணுகுவோர்க்கு ஏமாற்றமே மிஞ்சும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறோம்.

 ஆசிரியர்: யுவால் நோவா ஹராரி தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்.