தென் பெண்ணைக் கதைகள்

போர்க்குரல்கள்

என் கதைகள் சில நேரம் கூக்குரல் எழுப்பும் சில நேரம் போர்க்குரல் எழுப்பும் என்கிறார் அன்பாதவன். அவருடைய சிறுகதைத் தொகுப்பான தென் பெண்ணைக் கதைகளில் இப்படிப்பட்ட கதைகளே நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் கடைசிச் சிறுகதையான சம்பவாமி யுகே யுகே என்ற கதை தேர்க்காலில் தன் மகனை இட்டுக்கொன்று நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் கதையை சமகாலத்தில் சொல்கிறது. நீதியை மன்னன் வழங்காத போது, பாதிக்கப்பட்டவனே வழங்கும் புதிய நீதியைக் கட்டமைக்கிறது இக்கதை. நடுக்கடல் தனிக்கப்பல் என்ற கதை மூலமாக தருமபுரி இளவரசனின் காதல் கதையை மறுபடி எழுதிப்பார்த்து கேள்விகளை எழுப்புகிறார் அன்பாதவன். கடைசிவரியில் இந்த சம்பவங்கள் தொடர்கதையாவதையும் சுட்டுகிறார். சிறகுகளின் சாபம், இது அழிந்துவரும் இயற்கையை வருத்தத்துடன் பார்க்கும் கதை. அதனூடாக மானுடத்தின் அறியாமையும் இளமையில் தெரியாமல் செய்கின்ற துடுக்குகளும் பதிவாகின்றன. பறவைகளின் இனத்தின் கேள்வியை எதிர்கொண்டுத் தடுமாறி நிற்கும் கதை நாயகன், மறுகணம் எல்லாவற்றையும் உதறிவிட்டு சராசரி மனிதனாக மாறி நிற்கும் கணம் இச்சிறுகதையை உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது.

ஆசிரியர்: அன்பாதவன், இருவாட்சி வெளியீடு, 41, கல்யாண சுந்தரம் தெரு,  பெரம்பூர், சென்னை- 600011