
கடிதங்கள் சொல்லும் காலம்!
பேராசிரியர் இரா.இளவரசு பெற்ற மடல்களும் விடுத்த மடல்களும் என்கிற இந்த தொகுப்பு நூலில் அவருக்கு வந்த 125 கடிதங்களும் எழுதிய 191 கடிதங்களும் உள்ளன. இளவரசுக்கு கல்லூரி நண்பர் முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன். அவர் தம் இயற்பெயரான மு.சாத்தையா என்ற பெயரில் எழுதிய கடிதங்கள் மற்றும் பெருஞ்சித்திரனார் எழுதிய கடிதங்கள் ஆகியவையும் இந்நூலில் உள்ளன. ’வள்ளுவர் சொல்லியென்ன? இங்கர்
சால் காண்டேகரெல்லாம் இயம்பி என்ன? இடுக் கண் கண்டு இளநகை பூக்க இயலவில்லை!’ -இதே பாணியில் தமிழ்க்குடிமகனுடைய கடிதங்கள் அமைந்துள்ளன.
நட்பு பாராட்டுதல் மட்டுமல்ல; இக்கடிதங்களில் ஒரு காலகட்டத்தில் அரசியல் குறித்த இளையோரின் மனக்குமுறல், அவர்களின் இயங்கியல் ஆகியவற்றைக் குறிந்து அறிந்துகொள்ள முடிகிறது. இளவரசுக்கு காதலியாகவும் பின்னர் மனைவியாகவும் வாய்த்த வேலம்மாள் தம் காதலருக்கு ஒரு கடிதத்தில் எழுதுகிறார்: சென்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா நம்முடன் இருந்தார். அவர் பிறந்த நாள் விழாவை மகிழ்வாகக் கொண்டாடினோம். இவ்வாண்டு நமதருமை அண்ணா நம்மை விட்டுச் சென்றுவிட்டாரே.” காதலருக்கு எழுதும் கடிதத்தில் கூட அரசியல் பேசும் விழிப்புணர்வு கொண்ட அறிவார்ந்த இளைஞர்களைக் கொண்டதுதான் தமிழகம் என்பதை மேலும் மேலும் தூயத்தனித்தமிழில் அமைந்த இக்கடிதங்கள் உணர்த்துகின்றன. பழ.அதியமான் தந்திருக்கும் முன்னுரையும் குறிப்பிடத்தகுந்தது.
தொகுப்பும் பதிப்பும்: வைகறை வாணன், பொன்னி வெளியீடு, 2/1718, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-600 091