இன்றும் இனிக்கிறது நேற்று:

தமிழ்ப்பயணம்:

 

பிழையின்றி தமிழ் பேசுவோம் உள்ளிட்ட முப்பத்து ஆறு நூல்களைப் படைத்தவரான கவிக்கோ ஞானச்செல்வன் 1957-ல் தொடங்கிய இலக்கியப்பயணத்தில் 2011 வரையிலான நிகழ்வுகளில் சிலவற்றை இந்நூலில் எழுதி இருக்கிறார்இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிகழ்வில் தொடங்கி பல்வேறு சம்பவங்களை விறுவிறுப்பாக எழுதி உள்ளார். ஆசிரியப்பணியில் பல்லாண்டு கழித்திருக்கும் இவர் தமிழரசுக் கழகத்தில் மபொசிக்கு மிகவும் அணுக்கராக இருந்திருக்கிறார். அவருடனான நினைவுகள் இனிமையானவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இவரது ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு வரும் மபொசி, அந்நூல் பற்றி ஒரு சொல்லும் பேசாமல் மற்ற விஷயங்களை மட்டுமே பேசிச் சென்ற நிகழ்வையும் விடவில்லை! 1965-ல் ஒன்றுமில்லை என்ற தலைப்பில் மதுரையில் அண்ணா பேசுகிறார். அவர் மேடையில் பேசுகையில் மீசை இல்லாமல் தோற்றம் தந்தார்! உதட்டுக்கு மேலும் ஒன்றுமில்லை எனசொல்லித் தொடங்கி அவரது பேச்சை ஆரவாரமாக நிகழ்த்திய சம்பவத்தையும் இதில் படிக்கமுடிகிறது. கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள், தமிழ் விழாக்கள், தொலைக்காட்சிகளில் இலக்கண உரைகள் என இந்நூல் முழுக்க

ஞானச்செல்வனின் தமிழ்ப்பயணம் குறித்த குறிப்புகள் விரவிக்கிடக்கின்றன. கடந்த அரைநூற்றாண்டில் இவருடன் சக பயணிகளாக இருந்தவர்களையும் இந்நூலில் காணமுடியும் என்பது சிறப்பு.

 

ஆசிரியர்: கவிக்கோ ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17