தமிழ் முருகன்

தமிழர் தலைவன்

ஆழிப்பேரலையால் பெருமளவு நிலங்களையும் மனிதர்களையும் இழந்த தமிழினம் வடக்கு நோக்கி நகர்ந்தது. அங்கே தெற்கே இழந்த தன் ஞாபகங்களை மீட்டெடுத்தது.. அதில் ஒன்று மலை கண்ட இடமெல்லாம்  தம் தலைவன் முருகனைக் கண்டது. முருகனே தமிழ் இனத்தின் மிகப்பெரும் கடவுள் என்கிறார் கவிஞர் அறிவுமதி. தமிழ் முருகன்  என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் நூல் முருகனைத் தமிழ் நிலத்தின் மிகப்பெரும் தலைவனாக இலக்கியச் சான்றுகளின் மூலம் மீட்டெடுக்கிறது. தாய்க்கடவுள் கொற்றவை.. தமிழ்க்கடவுள் முருகன்.. இது நம் தமிழரின் வழிபாட்டு வரலாறு என்று சொல்லும் அறிவுமதி,  இன்றுள்ள முருகன் நம் முருகன் இல்லை என்கிறார். நாடாண்ட மன்னன்.. யானையின் மீதும்.. நாவாயின் மீதுமாய் சினந்து சென்று தமிழினம் காக்கப் போரிட்ட பேரன்புத் தலைவனை.. மன்னனை கோவணாண்டியாக்கி அவனை வழிபட்டால் பிச்சாண்டியாகி விடுவாய் என அச்சுறுத்தி.. என அறிவுமதி இந்நூலில் முருகனை நிறுவுகிறார்.

வேல் போர் சேய்.. வேல் போர் கொற்றவைச்  சிறுவ.. என சங்க இலக்கியங்களில் வருவதெல்லாம் முருகனைக் குறித்ததுவே எனச் சொல்கிற அறிவுமதி.. முருகனைப் போல வீரமுள்ள மன்னன் எனச் சங்கப்புலவர்கள் தம் காலத்து மன்னர்களைப் புகழ்ந்த இலக்கியச் சான்றுகளை முன் வைக்கிறார். தொன்றுதொட்டு வந்த தமிழரின் வழிபாட்டு  முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் அவற்றின் எச்சங்களும் ஏக்கங்களும் சின்னச் சின்னதாக தொடர்கின்றன எனப் பல உதாரணங்களை முன் வைக்கின்றார். முருகனுக்கு ஆடு வெட்டி பலி கொடுத்தார்கள் என்பதற்கு ஆதாரமாக ‘மறிக்குரல் அறுத்து தினைப் பிரப்பிரீஎன்கிற குறுந்தொகை வரியைக் காட்டுகிறார்.  தமிழ் இலக்கியங்களில் இருந்து முருகனைத் தோண்டி எடுத்து மாற்றுத் தெய்வமாக முன் வைப்போருக்கு தக்க ஆயுதமாக இது உருவாகி உள்ளது.

தமிழ் முருகன், அறிவுமதி, வெளியீடு: தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை, எண்:182, 4-வது பிரதான சாலை, ஸ்ரீ ஐயப்பா நகர், விருகம்பாக்கம், சென்னை-92